Tag Archives: கைலைமலை
பிரபுலிங்க லீலை-2.6
பிரபுலிங்க லீலை
*******************
2.6 ஒழுகுறும் அருவி யீட்டம் ஒலியினா னகுவெண் டிங்கள்
பழகுறு முடற்க ளங்காற் பாகசா தனன்கூர்ங் கோட்டு
மழகளி றுமிழ்ம தத்தான் மலர்மிசைக் கடவு ளுர்தி
அழகுறு நடையா லன்றி அறிதரப் படாவக் குன்றில்
அருவியீட்டம் – அருவிகளின் தொகுதி,
நகு – விளங்குகின்ற,
பாகசாதனன் – தேவர் கோமான்,
மழகளிறு – இளமையினையுடைய வெள்ளையானை,
மலர்மிசைக் கடவுள் – நான்முகன்,
ஊர்தி – ஊர்தியாகிய அன்னம்.
கைலைமலை வெண்ணிறமாக இருப்பதால் ஆங்கு வரும் அருவித் தொகுதியை ஒலியினாலும், திங்களைக் களங்கத்தாலும், வெள்ளையானையை மதநீராலும், அன்னத்தை அதனுடைய அழகிய நடையாலும் அறியலாமேயன்றி வேறு வகையாக அறிதல் இயலாது.
பிரபுலிங்க லீலை-2.4
பிரபுலிங்க லீலை
*******************
2.4 கொள்ளைவண் டிழிந்து தாது
…………குடைந்துமூகக் குழவு டைந்து
கள்ளழிந் தொழுகு செம்பாற் கடுக்கை
…………வேய்ந் திலகு வேணி
வள்ளல்வெண் புகழ்தி ரண்ட வளங்கெழு
…………கைலைக் குன்றில்
வெள்ளிவந் தத்தி யாச மாசவே
…………விளைந்த தம்மா.
கொள்ளைவண்டு – கூட்டமாகிய வண்டுகள்,(கொள்ளை கொள்ளுகிற வண்டுகள்)
இழிந்து – வந்து பொருந்தி,
தாது – மகரந்தம்,
குடைந்து – மூழ்கி,
மூகம் – மவுனம்,
குழவு – இளமை,
கள் – மது,
கடுக்கைவேய்ந் திலகுவேணி – கொன்றைமலரைச் சூடி விளங்குகின்ற சடை,
வள்ளல் – இறைவன்,
வெண்புகழ் – வெள்ளிய புகழ்,(புகழின் நிறம் வெள்ளை யென்பர்)
அத்தியாசம் – பொய்த் தோற்றம்.
வண்டுகள் கூட்டம் கூட்டமாக வந்து பொருந்தி வாய்பேசாதிருக்கும் பூவினைக் குடைந்து, மலரின் இளமையை உடைத்து மது உண்ணும் போது ஒழுகும் மதுவுடன் இருக்கும் கொன்றை மலரைச் சூடியிருக்கும் இறைவன், வெள்ளை நிறமுடைய புகழ் கொழிக்கும் கைலையில் அமர்ந்துளான்.
கைலைமலையானது சிவபெருமான் புகழ் திரண்டதால் வெண்மையாகத் தோன்றியது. அதனையறியாது மயங்கி வெள்ளிமலையெனக் கூறினர். இது பொய்த் தோற்றத்தால் உண்டாகியது என்பது கருத்து.
பிரபுலிங்க லீலை-2.3
பிரபுலிங்க லீலை
********************
2.3 நான்முக அண்டந் தன்னுள் நனிசிறந் தொப்பி கந்த(து)
ஊன்முக விழிக ளாற்கண் டும்பர்கள் உவகை பூப்பந்
தான்மிகு மருளான் மேனி சாத்திய பேரா னந்தக்
கூன்முக மதிய ணிந்த கொற்றவன் கைலைக் குன்றம்.
நான்முக அண்டம் – பிரமனாற் படைக்கப்பட்ட உலகம்,
நனி சிறந்து – மிகவுஞ் சிறந்து,
ஒப்பு இகந்தது – ஒப்பு இல்லாத தன்மை பொருந்தியது,
ஊன்முகவிழிகளால் – ஊனையுடைய முகக் கண்களால்,
மேனிசாத்திய – வடிவைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற,
கொற்றவன் – இறைவன்,
உவகைபூப்ப – மகிழ்ச்சியடைய.
கைலைமலைச் சிறப்பு பற்றி இப்பாடல் வருணிக்கின்றது. பிரமனால் படைக்கப் பட்டதெனச் சொல்லப்படும் இவ்வண்டத்தினுள், ஒப்பிலாததும் மிகவும் சிறந்ததுமான கையிலாய மலையினை உம்பர்களாம் வானோர் தங்களின் ஊனக் கண்களினால் உவகை பூத்துக் குலுங்கக் கண்டு களிப்பர். அம்மலை யாருடையதெனில், மருளாம் மயக்கம் தீர்க்கும் மேனிசாத்திய கொற்றவன், பேரானந்தக் கொற்றவன், வளவுபட்ட உருவுடைய மதியணிந்த கொற்றவன் கொலுவிருக்கும் மலை.










