Tag Archives: அநுமன்
தாணுமாலய சாமி கோயில் – சுசீந்திரம்
சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்”தான்.

தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருக்கம்(தலவிருட்சம்) கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.”
அதைக்குறிக்கும் முகத்தான் மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி எழுந்தருளியிருக்கிறார்.
பெண்ணாசையால் பல குற்றம் புரிந்த இந்திரன் கவுதம முனியின் சினத்துக்கும் சாபத்துக்கும் ஆளானான். அப்பாவத்தைக் களைய, இந்திரன் சுசீந்திரம் தாணுமாலயனை வேண்டித் தூய்மை பெற்றான்.
“சுசி” என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். இந்திரன் ஈங்கு தூய்மை பெற்றதால் இத்தலம் சுசீந்திரம் என்று விளங்கலாயிற்று.ஒவ்வொரு இரவிலும் இந்திரன் இங்கு வந்து பெருமானை வணங்கிச் செல்லுவதாகக் கதை.
கன்னியாகுமரி அம்மை தல புராணத்திற்கும் சுசீந்திரம் தலபுராணத்திற்கும் தொடர்பு உண்டு என்கின்றனர். பூவுலகம் நடுங்கும் வண்ணம் பாணாசுரன் பல வகையில் கொடுமைகள் செய்து வந்தான். உடனே நம் தேவர்களும், முனிவர்களும் வழக்கப்படி “எங்களைக் காத்து அருளும்” என சிவனிடம் வேண்டினர். முன்னமேயே, “பாணாசுரன் ஒரு கன்னியினால் அழிவான்” என பிரமன் சாபமிட்டிருந்தான். ஆகவே, சிவன், தன் சக்தியான பார்வதியைப் பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். அம்மையோ, தாணுமாலயப் பெருமானை மணக்க விரும்பியதால் ஒரு நன்னாளில் நள்ளிரவில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நன்னாளில் பெருமான் கன்னியாகுமரி கிளம்பினார். திருமணம் நடந்தால் அசுரவதம் நடக்காதே எனக்கவலையுற்ற நாரதர், ஒரு சேவலாக அங்கு வந்து கூவ, குறித்த நேரம் தவறிவிட்டது என தாணுமாலயன் சுசீந்திரம் திரும்பினார். திருமணம் தடைபட்டதால், கன்னியாகவே தவமிருந்து பாணாசுரனை அழித்து இன்னமும் கன்னித்தவத்தில் இருக்கிறாள் அம்மை.

சுசீந்திரத்தில் தாணுமாலயனுக்குத் திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரிக் கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது “தாணுமாலயத் தீர்த்தம்” என அழைக்கப்படுகின்றது. கதையெல்லாம் முடிந்தது.
கோயிலின் பரப்பளவு – 5,400 சதுர அடி
அரச கோபுரத்தின் உயரம் – நூற்று முப்பத்தி நாலரை அடி
ஆங்குள்ள கல்வெட்டு ஒன்றினால், இவ்வாலயம் 1881ல் திருப்பணிகள் துடங்கி 1888ல் குடமுழுக்கு நடந்ததாக அறிகிறோம். இவ்வாலயம் பாண்டியர் காலக் கலை, நாகரீகம், பண்பாடு ஆகியவைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.
கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பத்தை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள். இதுவன்றி, ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தில் கணபதியும், அவருக்கு இடப்பக்கத்தே அன்னை பார்வதியும் உள்ளனர்.இவைகள் வேறெங்கும் காணவியலா காட்சி. ஒரே கல்லில் செதுக்கிய நவக்கிரகங்களின் சிற்பங்களை மேற்கூரையில் அமைத்துள்ளனர்.
2000 ஆண்டுகள் பழமையான கொன்றை அடி தெற்கே உள்ளது. வடக்கே மாக்காளை எனும் நந்தியும், 18 அடி உயரமுள்ள அநுமனின் சிற்பமும் உள்ளது. இவ்வநுமன், கேட்போருக்குக் கேட்டதைக் கேட்டபடி தருபவர்.

நந்திக்கு தெற்கே கொன்றையடி நாதர் கோயில் உள்ளது. சுயம்பு இலிங்கமாக கொன்றை மரத்தடியில் வீற்றுள்ளார்.
மற்றபடி காணவேண்டியவை:
1.கலைநயம்கூறும் சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.
2.இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
3.திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
4.வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.
5.பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை.
குலசேகர மண்டபத்தின் கீழ்புறத்தில் “அறம் வளர்த்த அம்மன்” கருவறை உள்ளது.சித்திர சபையில் சுவற்றை ஒட்டி, இராமபிரானின் கருவறைக்கு எதிரில் அநுமன் நெடிதுயர்ந்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது இச்சிலை கிட்டியதாம். 1929ல் இப்பொழுது இருக்கும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
கருவறையில் தாணுமாலயப் பெருமான் இரண்டரை அடி உயரமுள்ள இலிங்க உருவில் அமைந்து அருள் பொழிகிறார்.இலிங்கத்தின் மேலே 16 சந்திர கலைகளுடன் படம் விரித்த நாகம். திருவிளக்கு பூசையில் பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்துவது அவர்களின் நம்பிக்கையின் அடையாளம்.

விழாக்கள்:
1.அறம் வளர்த்த அம்மனுக்கும் தாணுமாலயப் பெருமானுக்கும் மாசி மாதம் திருக்கல்யாணம் நடக்கும்.
2.மாசி மாதம் நடக்கும் தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டு, பின்னர் கன்னியா குமரியை வணங்கப் பாவமெல்லாம் நசித்துப் போகும் என்ற அசைக்கமுடியா நம்பிக்கை நிலவுகிறது.
ஆஞ்சனேயன் துதி
ஆஞ்சநேயன் துதி
******************
ஆஞ்சநேயன் துதி
********************
மிகச் சிவந்த முகமுடைய வானரன்
…..மேரு போன்ற எழிலுரு வாய்ந்தவன்
பகை யழித்திடும் வாயுவின் புத்திரன்
…..பாரிசாத மர நிழல் வாழ்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்
…..ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்.
அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன்
……ஆளும் இராமனின் நாமம் கேட்டிடில்
சிரத்தின் மீதிவன் கூப்பிய கையுடன்
……திரண்ட கண்ணில் நீர்சோரத் துதிப்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்
……ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்
சித்த வேகமும் வாயுவின் வேகமும்
……சேர்ந்தவன் தன் புலன்களை வென்றவன்
புத்தி மிக்கவர் தம்முட் சிறந்தவன்
……புகழி ராமனின் தூதுவன் வாயுவின்
சேயன் வானர சேனையின் முக்கியன்
……சென்னி தாழ்த்தியச் செம்மலைப் போற்றுவேன்.
யாரும் செய்வதற் கேயரி தானதை
…..ஐயநீ செய்குவை ஏதுனக் கரியது?
பாரில் என்செயல் நீநிறை வேற்றிவை.
…..பரிவின் ஆழிநீ இராம தூதனே!
ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!
…..ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!
அறிவு மற்றும் உடல் வலி நற்புகழ்
…..ஆளும் சொற்றிறம், அச்சமிலா மனம்
வறிய புன்பிணி நீங்கிய மேநிலை
…..வளரும் தைரியம் மேவிடும் நிச்சயம்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்திடின்
……அனுபவத் தினில் இவைபெற லாகுமே!
(ஆஞ்சநேயன் கோயிலில் கொடுத்த ஒரு அறிவிப்புத் தாளிலிருந்து எடுக்கப்பட்டது.)
அநுமன் துதி
ஸ்ரீஇராம ஜெயம்
**************
அநுமன் துதி
**************

ஓம் அசோகவனம் அழித்தவனே போற்றி
ஓம் அடலுடை வீரா போற்றி
ஓம் அபயம் தருபவனே போற்றி
ஓம் அழியா ஆன்மா உடையவனே போற்றி
ஓம் அனந்த சக்தி கொண்டாய் போற்றி
ஓம் அங்கதன் மெச்சிய அமைச்சரே போற்றி
ஓம் அணுவில் புகுந்தவனே போற்றி
ஓம் அஞ்சனை புத்திரா போற்றி
ஓம் அம்மை சோகம் தீர்த்தவனே போற்றி
ஓம் அம்மையின் ஆசி பெற்றவனே போற்றி
ஓம் அருச்சுனன் தேர்க்கொடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அனுமேயம் கடந்தவனே போற்றி
ஓம் அனுமனே போற்றி
ஓம் அனுமந்தா போற்றி
ஓம் அன்றினர் அழித்தவனே போற்றி
ஓம் ஆசையை வென்றவனே போற்றி
ஓம் ஆதவனைப் பிடித்தவனே போற்றி
ஓம் ஆதவன் மாணாக்கனே போற்றி
ஓம் ஆயகலைகள் அத்தனையும் அறிந்தவனே போற்றி
ஓம் அசுர குலத்து எமனே போற்றி
ஓம் ஆஞ்சனேயா போற்றி
ஓம் ஆயுள் வளர்ப்பவனே போற்றி
ஓம் இராம தூதா போற்றி
ஓம் இராம பக்தா போற்றி
ஓம் இராகுவைப் பிடித்தவனே போற்றி
ஓம் இலங்கை அழித்தவனே போற்றி
ஓம் இலங்கணி பணிந்தவனே போற்றி
ஓம் இலக்குவனுக்கு உயிரூட்டியவனே போற்றி
ஓம் இரஞ்சித முகத்தோனே போற்றி
ஓம் இரத்தின குண்டலம் அணிந்தவனே போற்றி
ஓம் இந்திர சித்தை வென்றவனே போற்றி
ஓம் உயிர்ப்பின் மைந்தா போற்றி
ஓம் ஊழி கடந்தவனே போற்றி
ஓம் எப்பவும் இராமா என்றிடும் தேவா போற்றி
ஓம் ஐம் புலன் அடக்கினவனே போற்றி
ஓம் கங்கையில் நடந்தவனே போற்றி
ஓம் கடல் கடந்தாய் போற்றி
ஓம் கடிகையில் அமர்ந்தவனே போற்றி
ஓம் கணையாழி ஈந்தவா போற்றி
ஓம் கணகண கண்டாமணி நாதனே போற்றி
ஓம் கதாயுதபாணியே போற்றி
ஓம் காமனை வென்றவனே போற்றி
ஓம் காலநேமி அழித்தவனே போற்றி
ஓம் காலத்தை வென்றவனே போற்றி
ஓம் கிரீட குண்டலனே போற்றி
ஓம் கிட்கிந்தை வாழ்ந்தவனே போற்றி
ஓம் கோடை இடிக் குரலோனே போற்றி
ஓம் கோள் துயர் நீக்கும் கோமகனே போற்றி
ஓம் கேதுவை அடித்தவனே போற்றி
ஓம் கேசரி மைந்தா போற்றி
ஓம் சக்தியின் இருப்பிடமே போற்றி
ஓம் சஞ்சிதம் களைபவனே போற்றி
ஓம் சஞ்சீவி மலை கொணர்ந்தவனே போற்றி
ஓம் சத்திய உருவே போற்றி
ஓம் சர்வ ரோகம் தீர்ப்போனே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சீதாராமனை நெஞ்சில் காட்டியவனே போற்றி
ஓம் செங்கமலக் கையுடையவனே போற்றி
ஓம் செந்தூர நெற்றி உடையவனே போற்றி
ஓம் சொல்லின் செல்வா போற்றி
ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி
ஓம் சுடர் ஒளித் திருவே போற்றி
ஓம் சூடாமணி கண்டவனே போற்றி
ஓம் ஞான ஒளியே போற்றி
ஓம் தசமுகப் பிரபுவே போற்றி
ஓம் தண்டைக் கழலோனே போற்றி
ஓம் தத்துவ ஞானியே போற்றி
ஓம் திரிசடை புகழ்ந்தோய் போற்றி
ஓம் திருவடி தாங்குபவனே போற்றி
ஓம் தீ£வினை அழிப்பவனே போற்றி
ஓம் துளசி மாலை அணிந்தவனே போற்றி
ஓம் நட்பின் இலக்கணமே போற்றி
ஓம் நவசக்தி மைந்தா போற்றி
ஓம் நறுமணம் கமழும் மேனியுடையவனே போற்றி
ஓம் நான்கு திருக்கரத்தை உடையவனே போற்றி
ஓம் நிகும்பலை யாகம் அழித்தவனே போற்றி
ஓம் நித்தியனே போற்றி
ஓம் நிரந்தரமானவனே போற்றி
ஓம் பராக்கிரமா போற்றி
ஓம் பாரிசாத மரத்தடி அமர்தவனே போற்றி
ஓம் பாவ விமோசனம் தருபவனே போற்றி
ஓம் பிரமச்சாரியே போற்றி
ஓம் பீமனின் அண்ணனே போற்றி
ஓம் பெரிய பெருமாளே போற்றி
ஓம் மகா தவசியே போற்றி
ஓம் மங்களம் தருவோனே போற்றி
ஓம் மஞ்சுள மாருதியே போற்றி
ஓம் மதுவனம் திரிந்தவனே போற்றி
ஓம் மருத மர வாசனே போற்றி
ஓம் மாதங்க வனப் பிரியனே போற்றி
ஓம் மாயையை நீக்குவபனே போற்றி
ஓம் மேதாவியே போற்றி
ஓம் மைநாகம் கண்டோய் போற்றி
ஓம் யோகத்தின் இலக்கணமே போற்றி
ஓம் வச்சிர உடல் உடையவனே போற்றி
ஓம் வச்சிராயுதம் உடைத்தவனே போற்றி
ஓம் வடிவழகு உடையவனே போற்றி
ஓம் வலிமுகம் கொண்டாய் போற்றி
ஓம் வாக்கு வன்மை தருபவனே போற்றி
ஓம் வாயு குமாரா போற்றி
ஓம் வானரர் தலைவா போற்றி
ஓம் விசுவ உருக் கொண்டவனே போற்றி
ஓம் விண்ணில் பறந்தவா போற்றி
ஓம் வித்தை ஈந்தவா போற்றி
ஓம் வீர சூர பராக்கிரமா போற்றி
ஓம் வெண்ணைப் பிரியனே போற்றி
ஓம் வேகத்தின் எல்லையே போற்றி
ஓம் வைதேகி புகழ்ந்தோய் போற்றி
****************************************










