Category Archives: கெளமாரம்
1500ஆம் பதிவு – கந்தர் கலிவெண்பா – 30
30.அங்கமிரு கூறா யடல்மயிலுஞ் சேவலுமாய்த்
துங்கமுட னார்த்தெழுந்து தோன்றுதலும் – அங்கவற்றுள்
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்து மிளையோனே – மாறிவரு
சேவற் பகையைத் திறல்சேர் பதாகையென
மேவற் தனித்துயர்த்த மேலோனே – மூவர்
குறைமுடித்து விண்ணங் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்தாட் கொண்டளித்த தேவே – மறைமுடிவாஞ்
சேவற் பகையை – பகைவனாகிய சேவல்(சூரன்)
பதாகை – கொடி
தனித்துயர்த்திய – மேலாக உயர்த்தி
மூவர் – மும்மூர்த்திகள்
விண்ணம் – தேவர் உலகம்
மறை முடிவாம் – வேதத்தின் முடிந்த பொருளாகிய
உடல் இரு பகுதியாய் ஒன்று மயிலாகவும் மற்றொன்று கோழியாகவும் சிறப்பாகத் தோன்றி ஆரவாரித்ததுடன், சீறி வரும் பாம்பைக் கொல்லும் மயிலை வாகனமாகக் கொண்டு அதன் மேலேறி அதை நடத்துவோனே! உடல்மாறிவந்த கோழியாகிய எதிரியைத் திறமையைக் காட்டவல்ல கொடியாக்கி அதை மற்ற கொடிகளுக்கு மேலாக உயர்த்திய மேலோனே!
மும்மூர்த்திகளுக்குச் சூரனால் ஏற்பட்ட குறைகளை நீக்கித் தேவர்களை விண்ணுலகில் குடியேறச் செய்து, விண்ணவர்களைச் சிறையினின்று விடுவித்த தெய்வமே! வேத நூல்களின் முடிவாக உள்ள உண்மையைத் தெரிவிக்கும்….
ஒருவழியாக இறையருளால் 1500 பதிவுகளை இட்டுவிட்டோம்.
கந்தர் கலிவெண்பா – 29
29. சூரனைச்சோ தித்துவரு கென்றுதடந் தோள்விசய
வீரனைத் தூதாக விடுத்தோனே – காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யாற்கொடிய
தானவர்கள் நாற்படையுஞ் சங்கரித்துப் – பானு
பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் – சகமுடித்த
வாரி தனிற்புதிய மாவாய்க் கிடந்தநெடுஞ்
சூருடலங் கீண்ட சுடர்வேலோய் – போர வுணன்
விசய வீரன் – வீரவாகு
காரவுணன் – கரிய அரக்கன்
தானவர்கள் – அசுரர்கள்
நாற்படை – யானை, தேர், குதிரை, காலாட்படை
பானுபகைவன் – பானுகோபன்
வாகை – வெற்றி
முடித்தோய் – அணிந்தவனே
வாரி – கடல்
மாவாய் – மாமரமாகி
செல்வனாகிய சூரனைக் கேட்டுவரும்படி அகன்ற தோள்களையுடைய வெற்றி பொருந்திய வீரவாகுவைத் தூதனாகச் சூரனிடம் அனுப்பினவனே!
கரு நிறம் பொருந்திய அசுரன் தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்து முருகப்பெருமானை வழிபட இசையாமையால், கொடுமை மிகுந்த அசுரர்களின் நால்வகைப் படைகளையும் கொன்று தொலைத்து, பானுகோபன், அக்கினிமுகன், இரணியன், வச்சிரவாகு என்னும் சூரன்மக்களையும், அவன் தம்பியாகிய சிங்கமுகா சூரனையும் வென்று, தேவர்களின் வெற்றியை முற்றுப்பெறச் செய்தவனே! வெற்றி மாலை சூடியவனே!
நிலத்துக்கு ஆடையாக இருக்கும் கடலில் திடீரென புதிய மாமரமாய் நின்ற நெடிய சூரனது உடலைக் கிழித்த ஒளிர்கின்ற வேலையுடையவனே! போரில் வல்ல அரக்கனது….
கந்தர் கலிவெண்பா – 28
28. பொன்னங் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே – கொன்னெடுவேல்
தாரகனும் மாயத் தடங்கிரியுந் தூளாக
வீர வடிவேல் விடுத்தோனே – சீரலைவாய்த்
தெள்ளுதிரை கொழிக்குஞ் செந்தூரிற் போய்க்கருணை
வெள்ளமெனத் தவிசின் வீற்றிருந்து – வெள்ளைக்
கயேந்திரனுக் கஞ்ச லளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்திற் புக்கிமையோர் வாழச் – சயேந்திரனாம்
கடுக்கை – கொன்றை
பிரமம் – பிரணவத்தின் பொருள்
கொன் – வலிமையுள்ள
மாயத் தடங்கிரி – மாயையுடன் கூடிய பெரிய மலை
அலைவாய் – கடல் துறை
தவிசு – இருக்கை, பீடம்
கயேந்திரன் – வெள்ளை யானையை உடைய இந்திரன்
அஞ்சல் – அபயம்
மயேந்திரம் – மகேந்திரபுரம் (அரக்கன் சூரனின் தலைநகர்)
சயேந்திரன் – சய இந்திரன்
வெற்றித் தலைவன் – சூரன் (வானவரை வென்றவன்)
பொன்னிறமான அழகிய கொன்றை மலர் சூடிய சடைமுடியுடைய பெருமான் தன்னைத் துதித்து வழிபட, முற்காலத்தே பிரம (பிரணவத்டின் பொருள்)உபதேசம் செய்தவனே!
வலிய நெடிய வேலுடைய தாரகாசுரன் சாகவும் அவன் வடிவமாகிய கிரெளஞ்சமென்னும் பெரிய மலை பொடிப்பொடியாகவும் வீரமிகுந்த கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்தியவனே!
அழகிய கடலிடத்தே சுத்தமான அலைகள் (மணிகளைக்) கொழித்துச் சேர்க்கும் திருச்செந்தூரில் சென்று ஆசனத்தின்மீது அருட்கடல் வடிவாக வீற்றிருந்து சூரபதுமனால் வருத்தப்பட்ட வெள்ளை யானையை உடைய இந்திரனுக்கு “அஞ்சாதே!” என்று அபயங்கூறி, தேவர்கள் வாழ்வு பெற்று உய்வதற்காக சூரபதுமனுக்கு உரிய கடல் நடுவில் உள்ள வீரமகேந்திரம் என்னும் அரசநகரில் புகுந்து அவர்களை வென்ற…..










