Category Archives: கதைகள்

வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள்

கங்காதேவியின் புத்திரனான பீஷ்மர், தந்தைக்காக பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்ட உத்தமர். அவர் தனது தம்பி விசித்திர வீரியனுக்காக காசி ராஜனின் அரண்மனையில் நடந்த சுயம்வரத்தில் கலந்து கொண்டார். காசிராஜனுக்கு அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்னும் மூன்று பெண் மக்கள் இருந்தனர்.

தனது வம்சம் தழைக்க அவர்கள் மூவரையும் தன்னுடன் அழைத்து வந்து, தம்பிக்கு மணம் முடித்து வைக்க எண்ணி தேரில் ஏற்றிச்சென்றார் பீஷ்மர். ஆனால், அம்பை சாலுவதேசத்து அரசனான பிரம்மதத்தன் என்னும் மன்னனை விரும்பியதால் தன்னை அங்கே அனுப்பிவிடும்படி கூறினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்துவிட்டார்.

மாற்றானால் கடத்தப்பட்ட அம்பையை பிரம்மதத்தன் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் பீஷ்மரிடம் திரும்பிய அம்பை, தன்னை மணக்கும்படி வேண்டினாள். அவரோ பிரம்மச்சர்யத்தில் உறுதியாக இருந்ததால் மறுத்தார். அவள் பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டினாள். அம்பைக்காக பரிந்துபேச வந்த பரசுராமர், பீஷ்மரிடம் அவளை மணம் முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், பீஷ்மர் மறுத்தார்.

கோபம் கொண்ட அவர் தனது பேச்சைக் கேட்காத சீடனுடன் போரிட்டார். அவரிடம் வில்வித்தை கற்ற பீஷ்மர், அவரையே வெற்றி கொண்டார். தோல்வியடைந்த பரசுராமர், அவரது பிரம்மச்சரிய விரதத்தின் மகிமையை அறிந்து சென்றுவிட்டார். குருவே சொன்னாலும்கூட, ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியில் இருந்து தவறக்கூடாது என்பதற்கு பீஷ்மரின் வாழ்வில் நடந்த இந்நிகழ்வு ஒரு உதாரணம்.

விவேகம்

விவேகம்

*********

ஒரு காட்டில் ஒரு முனிவர் ஆசிரமம் அமைத்துத் தன் துணைவியாரோடு வாழ்ந்துவந்தார். காட்டின் அருகாமையில் இருந்த ஊரிலிருந்து மூன்றுபேர் அம்முனிவரின் சீடர்களாகிவிடவேண்டும் என்னும் எண்ணத்துடன் ஆசிரமத்திற்கு வந்தனர்.

முனிவர் அவர்களை நோக்கி,”இன்று போய் நாளை வாருங்கள்என்றார். பின்னர் தம் துணவியாரை அழைத்து, நாளை இவர்கள் வந்ததும்,”என் காதில் ஓணான் புகுந்து நான் இறந்துவிட்டேன்எனச் சொல்” என்றார். பொழுது விடிந்ததும், அதிகாலையில் அம்மூவரும் வந்தனர். துணைவியாரும் அவர்களை நோக்கி,”முனிவரின் காதில் ஓணான் புகுந்து அவர் இறந்துவிட்டார்என்று சொன்னார். முதலாமவனோ,”முனிவருக்கு மாரகச் சனி. அதனால்தான் மரணமடைந்துவிட்டர்எனச் சொல்லித் திரும்பிப் போய்விட்டன்.

இரண்டாமவனோ,”இல்லை. இல்லை. முனிவரின் முன்வினைப் பயன். அவர் இறந்துவிட்டார்எனக் கூறித் திரும்பிவிட்டான்.

ஆனால், மூன்றாமவனோ, துணைவியாரின் முகத்தை உற்று நோக்கிவிட்டு,”முனிவர் இறக்கவில்லை. உயிரோடு உள்ளேதான் இருக்கிறார்என அடித்துச் சொன்னான்.

உள்ளிருந்து வெளிவந்த முனிவர்,”எப்படிச் சொன்னாய்?” எனக் கேட்க, “தங்களின் இறப்பால் வரக்கூடிய துக்கம் அம்மையின் முகத்தில் துளிகூட இல்லை. அடுத்துக் காதில் ஓணான் நுழைவது நடக்க இயலாத ஒன்று. அதனால்தான் தாங்கள் இறக்கவில்லைஎன்றான். அவனின் விவேகத்தை மெச்சி அவனை மட்டும் சீடனாக ஏற்றுக்கொண்டார் முனிவர்.

 

வேலையாள் செய்த தவறுக்குப் பொருப்பு எசமானனே!

வேலையாள் செய்த தவறுக்குப் பொருப்பு எசமானனே!

******************************************************

விப்ரகோஷம் எனும் சிற்றூரில் விபீடணனுக்குப் பிரும்மஹத்தி தோஷம் அறியாமையால் ஏற்பட்டது. அதன் காரணமாகப் பல கொடிய செயல்களைப் புரிந்தான். ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அவனை அடித்துக் கொல்ல முயன்றனர். ஆனால், விபீடணன் இராமபிரானிடம் இந்தக் கல்பம் முடியும் வரை ஆயுளும், அரச பதவியும் வரமாகப் பெற்றவன். அதனால் இறக்கவில்லை. அவ்வூர் மக்கள் விபீடணனைச் சங்கிலியால் பிணைத்து ஒரு குகையில் சிறை வைத்துக் குகையை மூடி விட்டனர்.

உடனே, அங்கு ராமபிரான் எழுந்தருளினான். ஊர் மக்கள் அவரைப் பணிந்து போற்றினர். அப்புறம், இராமபிரான் மக்களைப் பார்த்து, “வேலையாள் செய்த தவறுக்குப் பொருப்பு எசமானனே!”. ஆகவே, விபீடணனுக்குக் கொடுக்கும் தண்டனையை எனக்குக் கொடுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன்என்றார். இராமபிரானின் தன்மையைக் கண்டு அனைவரும் அவரைச் சரணடைந்தனர். பின்னர் விபீடணனும் விடுவிக்கப் பட்டான். அத்துடன் அவனைப் பிடித்திருந்த பிரும்மஹத்தி தோஷத்தையும் இராமபிரான் நீக்கி அருளினார்.

நன்றி: தினமலர்