Category Archives: பழமொழி நானூறு

பழமொழி – 400

பழமொழி - 400

******************

6.47 நெடியது காண்கிலாய் நீயெளியை; நெஞ்சே!

கொடியது கூறினாய் மன்ற - அடியுளே

முன்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு

பின்பகல் கண்டு விடும்.

 

நெஞ்சே! தீய செயல்களைப் பிறருக்குச் செய்யுமாறு கூறினாய். ஆதலால் நீ அறிவு இல்லாதாய்; பிறருக்குத் தீங்கு செய்தலால் வரும் பயனை நெடுங்காலத்திற்குப் பின் அறியாய். அந்த நிலையிலே, முற்பகலில் பிறருக்குச் செய்த தீங்கின் பலனை, பிற்பகலில் தப்பாமல் அடைவான்.

 

பழமொழி - முன்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு

பின்பகல் கண்டு விடும். (முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.)

பழமொழி – 400

பழமொழி - 400

***********************

6-45.வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு

நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்

புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய்

தனக்கின்னா இன்ன பிறர்க்கு‘.

 

வயலின்மீது பொன்போல விளங்கும் தேமலை உடைய பூங்கொம்பை ஒப்பாய்! தனக்குத் துன்பம் தருவன பிறருக்குந் துன்பம் தருவனவாம். ஆதலின், செய்கின்ற செயலில் பயன் ஏதுமில்லாமல், பகமை மட்டுமே கொண்டு இன்னல் தருவது தீங்காம். ஆக, யாவற்றையும் ஆராய்ந்து, பிறர் வருந்தத்தக்கனவற்றைச் செய்யாது தவிர்த்தல் வேண்டும்.

கருத்து: பிறரையும் தம்மைப்போல் நினைத்து தீங்கு செய்யாதிருத்தல் வேண்டும்.

பழமொழி:தனக்கின்னா இன்ன பிறர்க்கு.

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க் கின்னா செயல்” – திருக்குறள்.

பழமொழி – 400

6.இன்னா செய்யாமை

********************************

6.44 – பூவுட்கும் கண்ணாய் பொறுப்பர் எனக்கருதி

யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா

தேவர்க்கும் கைகூடாத் திண்ணன்பி னார்க்கேயும்

நோவச்செய் நோயின்மை இல்.

 

தாமரையும் தன் கண்ணுக்கு ஒப்பில்லை என்று வருந்தும் கள்ளை உடையாய்! தேவர்கட்கும் இயலாத காழ்த்த அன்புடையார்க்காயினும் துன்புறுத்தினால், துன்புறாது இருப்பது இல்லை. பொறுமையை இழப்பார். ஆகையால் எத்துணை தீங்கு செய்யினும் பொறுப்பார் என்றெண்ணி எத்துணை எளியராயினும் தீங்கு செய்தல் வேண்டாம். அதாவது எவருக்கும் தீங்கு செய்தல் வேண்டாம்.

 

பழமொழி - “நோவச்செய் நோயின்மை இல்.”