Category Archives: ஞானம்
சிவ வாக்கியம் – 511
சிவவாக்கியர் பாடல்கள் - 511 ***********************************************
511.நீரினில் குமிழியொத்த நிலையிலாத காயமென்று
ஊரினில் பறையடித் தூதாரியாய்த் திரிபவர்
சீரினில் வுனக்குஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்.
நீர்மேல் எழும்பும் நீர்க்குமிழியைப் போன்ற நிலையில்லாத உடலிது எனத் தத்துவங்கள் பேசி, தாங்களே ஈசனின் பிரதிநிதி என்று ஊர் முழுவது பறையடித்துப் பிரச்சாரம் செய்வார்கள். மெய்ப்பொருள் என்ன என அறியாது ஊதாரியாய் திரியும் அவர்கள் போலிக் குருக்கள். ஊரிலுள்ளோரை எல்லாம் அழைத்து ஞானம் பெற என்னிடம் உபதேசம் பெற்றுக் கொள்ளுங்கள்.; வெகு விரைவில் உங்களுக்கு ஞான சித்தியை நானே கொடுப்பேன் என்பார்கள். ஒவ்வொரு படியாக உபதேசம் பெறவேண்டும் எனக் கூறி, அதற்கு இவ்வளவு கட்டணம் கொடுங்கள் என்று கட்டாயமாகப் பொருளை வசூல் செய்வார்கள். இப்படியாக வாழ்நாள் முழுதும் தொடர்ந்து பொருளைக் கைப்பற்றுவார்கள். இப்போலிகளிடமிருந்து தூர விலகுங்கள்.
சிவ வாக்கியம் – 510
சிவவாக்கியர் பாடல்கள் - 510 ***********************************************
510.காயகாய முண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதெங்கு மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாவடித்து நேரபினைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.
காயகற்பம் உண்டு சாகாவரம் பெற்றவர் என்று கண்டவர்கள் மதிக்கும்படி சொல்லிக் கொள்வார்கள். காயகற்பம் உண்டால், மாய வித்தைகள் செய்யலாம் என்று ஆசையூட்டுவார்கள். மோசமான காரியங்கள் பல செய்வார்கள். எப்பொழுதும் அபினைக் காயகற்பம் என்று தின்பார்கள். கஞ்சா அடிப்பார்கள். அதனால் பைத்தியம் பிடித்த நாயைப் போல சாக்கடை நீரை நக்கிக் குடித்து நாட்டில் அலைவார்கள்.
சிவ வாக்கியம் – 509
சிவவாக்கியர் பாடல்கள் - 509 ***********************************************
509.யோகசாடை காட்டுவார் வுயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே.
அனைவரும் தம்மை இறைவனின் அவதாரம் என மதிக்க வேண்டும் என்று யோக சாடைகளையும் முத்திரைகளையும் செய்து காட்டுவார்கள். தரையிலிருந்து உயர எழுந்து அந்தரத்தில் அமர்ந்து வாக்கு சொல்லுவார். வெகு வேகமாக சித்து விளையாட்டுக்களை செய்துகாட்டி வியப்படையச் செய்வார். ஆனாலும், அந்தப்புறத்தில், மோகங் கொண்டு காம ஆசையால் சிற்றின்பத்தில் சிக்கிக் கொள்வார். உண்மை வெளி வந்தவுடன் பெண்ணாசையால் பேய் பிடித்தவர் போல அலைந்து இப்பேருலகில் சாவார்கள். ஆகையால் சித்து வித்தைகளை விலக்கி மெய்ஞான வழியில் செல்லுங்கள்.










