Category Archives: ஞானம்

சிவ வாக்கியம் – 514

சிவவாக்கியர் பாடல்கள் - 514                              ***********************************************

514.செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லிரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே.

 

வயிரம் பாய்ந்த செம்மை மிகுந்த பழமையான மரத்தில் சிலைகளையும் தலைகளையும் செய்து வணங்குகின்றீர்கள். அதே மரத்தில் கொம்பில்லாத கிளையில் பாதக் குறடுகள் செய்து காலில் போட்டு மிதிக்கின்றீர்கள். கையெடுத்து வணங்கியதும் காலில் போட்டு மிதித்ததும் ஒரே மரத்தில் ஆனது தானே. உங்களுக்குள்ளே சோதியாக விளங்கும் ஈசனை அறிந்து, உணர்ந்து, அவனையே நாடி நோக்கிக்கொண்டே இருக்க வல்லவரானால், இம்மலமான உடம்பில் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும், எந்த ஒரு மலமும் இல்லாது மனம் மாசற்றுத் தூய்மையடையும். அங்கே ஈசன் குடியிருப்பான்.

சிவ வாக்கியம் – 513

சிவவாக்கியர் பாடல்கள் - 513                                ***********************************************

513.முத்திசேரச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லியெங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே.

 

சீவமுக்தி அடைவதற்கு முன் சகல சித்திகளையும் இங்கு நான் தருவேன் பாருங்கள் என்று சத்தியங்கள் பல சொல்லி, சாமி வேடம் பூண்டவர், தினம் தினம் தன் வயிறு வளர்க்க, மெய்ப்பொருள் அறியாது ஞான விளக்கங்களையும், நீதிக் கதைகளையும் சொல்லி, குரு காணிக்கை என்னும் பெயரில் பணம் பறிப்பார்கள். ஞானத்தை விலை கூறி விற்பதால் இவர்கள் பாழும் நரகத்தில் விழுவார்கள்.

சிவ வாக்கியம் – 512

சிவவாக்கியர் பாடல்கள் - 512                                ***********************************************

512.காவியும் சடைமுடி கமண்டலங்க ளாசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசமெங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட் டலைவரே.

 

காவி கட்டி, சடாமுடி தரித்து, கமண்டலம் ஏந்தி, மான் தோல் ஆசனத்தைக் கையில் வைத்துக்கொண்டு, கழுத்திலும் உடலிலும் உருத்திராட்ச மாலைகள் அணிந்துகொண்டு, யோகத்தண்டம் கையில் ஏந்தி, முனிவர் வேடம் இட்ட சோம்பேறி மாடுகளான மனிதர்கள், தங்கள் மனைவியைத் தவித்து அலையவிட்டு, தேசமெங்கும் சுற்றி வருவார்கள். ஆனாலும், பாவிகள் ஒரு வேளை சோற்றுக்கு வீடு வீடாகச் சென்று பிச்சை எடுப்பார்கள்.