Category Archives: ஞான முத்துக்கள்
பல்லி விழும் பலன்
பல்லி விழும் பலன்
********************************
“பல்லி விழும் பலனை நம்பலாமா?” என நண்பர் ஒருவர் கேட்டார். அதற்கான விடை இதோ.
நாட்காட்டிகள், பஞ்சாங்கங்கள் ஆகியவற்றில் பல்லி விழும் பலன் பொதுவாக இருக்கும். பெரும்பாலானோர்களும் அதைத் தவறாது பார்த்து மனதைக் குழப்பிக்கொள்வது வழக்கமாகி விட்டது.
| உறுப்பு | இடம் | வலம் | உறுப்பு | இடம் | வலம் |
| தலை | துன்பம் | கலகம் | நெற்றி | கீர்த்தி | லக்ஷ்மிகரம் |
| வயிறு | மகிழ்ச்சி | தானியம் | முதுகு | கவலை | நஷ்டம் |
| கண் | பயம் | சுகம் | தோல் | வெற்றி | வெற்றி |
| பிருஷ்டம் | செல்வம் | சுகம் | கபாலம் | வரவு | வரவு |
| கணுக்கால் | பயணம் | செலவு | மூக்கு | கவலை | வியாதி |
| மணிக்கட்டு | கீர்த்தி | பீடை | தொடை | சஞ்சலம் | சஞ்சலம் |
| நகம் | நஷ்டம் | செலவு | காது | லாபம் | ஆயுள் |
| மார்பு | சுகம் | லாபம் | கழுத்து | வெற்றி | பகை |
இது எவ்வளவு பலிக்கிறது என்றால் யாருக்கும் தெரியவில்லை.
இன்னுமொன்றும் சொல்கின்றனர். பல்லி ஏறினால் – ஜெயம், வெற்றி; இறங்கினால் – தோல்வி. ஆகவே கூகுளில் தேடியபோது கிட்டியவை:
Jothida Rathna K.Vidyatharan
“பல்லிக்கு ஒலி எழுப்பும் சக்தி உள்ளது. ஊர்வன வகைகளில் இதுபோல் ஒலி எழுப்பும் சக்தி மற்ற உயிரினங்களுக்கு கிடையாது. இயற்கையின் சூட்மத்தை உணரக் கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு.
பறவைகளில் கிளி மிகவும் நுணுக்கமானது. ஆன்மிகத்தில் கிளி, கருடன், மயில் ஆகியவற்றிற்கு சிறப்பம்சம் உண்டு. அவை தெய்வங்களின் வாகனமாக கருதப்படுவதால் அவற்றையும் வழிபடுகிறோம். அந்த வகையில் பல்லிக்கும் சில சிறம்பங்கள் உண்டு.
எனவேதான் அதன் சத்தத்திற்கும், அது மேலே விழுவதால் ஏற்படும் பலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மற்றபடி வரலாற்றுப் பதிவுகள் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை.
ஆனால் பண்டைய கால சமய நூல்களில் பல்லியை பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பல்லியை மிதித்து விட்டாலோ, தவறுதலாக கொன்று விட்டாலோ அதனால் ஏற்படும் பாவம் பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அது வணங்கத்தக்க உயிரினமாக கருதப்படுகிறது.
நிகழப்போகும் இடர்பாடுகளில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி பல்லிக்கு உண்டு என்பது நம்பிக்கை. பல்லி கிழக்கு நோக்கி இருந்தபடி சப்தம் எழுப்பினால் ஒருவித பலனும், மேற்கு நோக்கி இருக்கும் போது சப்தம் எழுப்பினால் மற்றொரு பலனும் கூறப்படுகிறது. ஜீவராசிகளில் பல்லிக்கு கூடுதல் சக்தி உண்டு என்பதில் மாற்றமில்லை.”
பல்லி விழும் பலனை ஏன் நம்பவேண்டும் என்பதற்கு சரியான விளக்கமில்லை.
கரிசக்காடு - உதயசங்கர்
சுவரில் பறந்து வந்து ஒட்டுகிற சிறு பூச்சிகளை நோக்கி வேகமாகப் போகும் போது எப்போதாவது அதன் பிடிமானம் தவறாதா? அப்படி அதன் நிலை தவறிக் கீழே விழும்போது மனிதர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது தானே விழும். அதற்குப் பல்லி பொறுப்பாக முடியுமா? அப்படி விழும்போது, சரி இவன் காலில் விழுவோம் என்றோ, அவன் தலையில் விழுவோம் என்றோ, இன்னொருத்தன் கையில் விழுவோம் என்றோ முடிவு செய்தா விழும்?
சரி எங்கே விழுந்தாலும் உயிர் பிழைக்க வேண்டும் என்கிற பதட்டம் தானே அதுக்கு இருக்கும். பாவம் அதைப் போய் தலையில் விழுந்தால் கலகம், நெற்றியில் விழுந்தால் பதவி என்று மனிதர்களுடைய உறுப்பு வாரியாகப் பலன் எழுதியிருக்கிறார்களே! வேடிக்கையாக இல்லை.
எங்கே விழுந்தாலும் பாவம் பல்லி. இசகு பிசகா விழுந்துட்டா பல்லியல்லவா செத்து விடும். ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாத ஒரு காரியம் ஒரு பல்லி தன்னுடைய கீச்சுக் குரலில் கத்துவதால் மட்டும் நடந்து விடுமா? யோசித்துப் பாருங்கள்.
இவரின் வாதம் சிந்திக்க வைக்கிறது.
நண்பர் KRS தன் வலைத்தளத்தில் பல்லி சத்தமிடுவதை நம்புவது சங்க காலத்தில் இருந்தது எனத் தரும் ஆதாரம் கீழே:
சங்கத் தமிழில் மூட நம்பிக்கை
கலித்தொகை11 (lines 4-22)
பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்
வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:
‘அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே
….
இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே!
அதோ, பல்லியும் சத்தம் போடுது; என் மனசை ஒத்து இசைக்குது!
மையை உண்ணும் என் இடக் கண்ணும் துடிக்குதுடீ!
அவன் வந்துருவான், வந்துருவான்!
வந்தானா இல்லையா. அது அடுத்த கேள்வி.
என்னதான் சொன்னாலும், “எது எது எப்படியிருக்கணுமோ, அது அது அப்படியே தான் இருக்கு“. பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது நினைவுக்கு வருகிறது:
“உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் நம்பி ஒத்துக்கொள்ளும் *****முன்னால் கதறி என்ன; புலம்பி என்ன தோழா. ரொம்ப நாளா.”
இன்னுமா இதையெல்லாம் நம்புகிறீர்கள்.
69.கைகாட்டி மரம்
நான் ஒரு கைகாட்டி மரம்
***************************
ஞானத்தின் வழி செல்ல நினைப்போருக்கு ஒரு சில வார்த்தைகள்:
இறைவன் ஒன்றே; உருவற்றவன். அவனுக்குச் சாத்தப்பட்ட குணநலன்களை வைத்து அவன் நம் உடலில் எங்கு உள்ளான் எனத் தெரிந்துகொள்வது முதல் படி. என் அநுபவத்தில் புரிந்தது:
சிவன் = சீவன் = ஆன்மா
சக்தி = kinetic&potential = விந்து சக்தி
“சிவன் இல்லாமல் சக்தி இல்லை; சக்தி இல்லாமல் சிவம் இல்லை” – விந்துவால் உருவாகிறோம். விந்து சக்தி பெருகுகிறது. வாலிபம் கிட்டுகிறது; அதை விரயம் செய்து தொலைக்கிறோம்; இறுதியில் மரணம். அப்போது மீதமுள்ள விந்துவும் வெளியாகிப் பிணமாகிறோம். விந்து சக்தி உள்ளவரை சீவன் இருக்கிறது; விந்து சக்தி வெளியானதும் பிணமாகிறோம். பிணம் நாறுகிறது;முகம் விகாரமாகிறது; உடல் வீங்குகிறது. இதுதான் அசுத்த சாவு. எவனொருவன் முறையாக ஞானப்பயிற்சி செய்து விந்தை வெளியாக்காது இறக்கிறானோ அதுவே சுத்த சாவு.
விந்துவே “ஆதி.” இறக்கும்போது அத்துடன்(விந்து) கலந்தால், அதாவது சமம் ஆனால் சமாதி. சமம்+ஆதி=சமாதி.
திருமால் - நம் உடலில் உள்ள முகுளம்.
பெருமா - பிரம்மா - நம் மனம். பிறப்புக்களை எண்ணங்களாய்ப் படைப்பவன். எண்ணங்கள் அடங்கினால் மனம் அடங்கும்.
செயலில் இறங்கவழி - பிராணாயாமம்- மூச்சுப் பயிற்சி
பிராணாயாமம்: – வளிப்பயிற்சி: – மூச்சுப் பயிற்சி - வாசி யோகம் இவையெல்லாம் ஒன்றே.
இரேசகம்: 32 மாத்திரை அளவு
உயிர்க்காற்றை (வாசிக் குதிரையை) உள்ளே இழுத்தல்.
கும்பகம்: 64 மாத்திரை அளவு
அதை அப்படியே உள்ளே அடக்கி வைத்தல். இதுதான் வாசிக் குதிரையை அடக்குவது.
பூரகம்: 16 மாத்திரை அளவு
அடக்கியதை மெதுவாக வெளிவிடல்.
மாத்திரை அளவு:
“கண்ணிமைப் பொழுதும், கைநொடிப்பொழுதும் மாத்திரைக்களவாம்.” – பவணந்தி
எடுத்துக் காட்டு: “சிவசிவ” – 4 மாத்திரை
இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில்
நிறைவுசெய். உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் செய்யப் பலனில்லை. உள்ளே இருக்கும் பிராண வாயுவை உள்ளேயே இழுத்து, அடக்கி வைத்துப் பின் மெதுவாக வெளிவிடுதலாம்.
நாகப் பாம்பு மூச்சு விடுவதைக் கவனித்து அதுபோலச் செய்ய வேண்டும்.
இது கைவரத்தான் “ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து” சூரிய, சந்திர அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும். இரு கண்களாலும் மூக்கின் நுனியை பார்க்கவேண்டும். குவிந்த பார்வையாக (ஊசி முனை போல) நிலை நிறுத்த வேண்டும்.
பிறவி அறுக்க எண்ணம் உதிக்கும்; மனம் அடங்க வேண்டும். மனத்தில் சலனம் இல்லாமல் வைக்க வேண்டும். மனத்தில், சிவனின் உருவமோ, குருவின் உருவமோ, கோவிலின் உருவமோ இருந்தால் மனம் காலியாக இல்லையே? சூனியம்தானே வேண்டும்.
ஞானக் குறள்
*******************
79. பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு.
வெட்டாத சக்கரமாம் பிரிவுபட்ட கண்களினால் கபாலக் குகையினுள்ளே அசைவற்ற மனத்தையும், நினைவையும் ஒன்றாகக் கருத்தில் கலந்து அகத்தவம் செய்தலே பிறப்பறுக்கும் வழி.
அவரவர்க்கு எதுஎது கைவருகிறதோ அதிலிருந்து ஆரம்பித்துக் கொள்ளலாம். இதுவே முதல் படி.
இன்னுமொரு வழி:
தியான முறைகள் பலதரப்பட்டவை.. ஒவ்வொருவரும் தன் முறையே உயர்வு என போற்றிக்கொள்வர்.. தியானத்தால் சாதிக்க வேண்டியது என்ன?
மனமடங்கி ஒருநிலைப் படுதல். ஆணவம், கன்மம், மாயை (ஒழிதல் மிகக் கடினம்) வெறுத்துக் குறைத்தல். சகல உயிர்களிடத்தும் கருணை, அன்பு காட்டல். இனிய வார்த்தை சொல்லல். காலம் வீணாக்காமை. எக்காலத்தும் இறைச் சிந்தனையோடு செயல்படல். சும்மா இருத்தல் (சோம்பி அல்ல). அகம்பாவமற்ற பணிவுடைமை.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் ஞானாசிரியன்(குரு) இல்லதவர்கள் செய்யவேண்டியது இரு முறைகள்:
1.எண்ணும் எழுத்தும் - தங்களுக்குப் பிடித்த ஒரு இறைநாமத்தை (சிவா,
நாராயணா, அம்மா, தாயே…) உச்சரித்தல். அப்படி உச்சரிக்கும்போது, கையில்
ஒரு மணிமாலை (ஏதாகவிருப்பினும் சரி. படிகம்தான் நல்லது. இல்லை!
இல்லை! உருத்திராக்கம்தான் நல்லது என்று யார் சொன்னாலும் செவிகொடாதீர்) வைத்துக் கொண்டு எத்தனை முறையென மனதிற்குள் எண்ணிவருதல் அவசியம். இதால், உச்சரிக்கும் மந்திரமும் எண்ணிக்கையும் மட்டும்தான் மனதில் நிற்கும். மனமடங்கி ஒரு சுகம் கிட்டும்.
2. MEDITATION FOR DUMMIES
******************************************
ஒன்றையும் நினையாது மூச்சுக்கற்றின் பாதையை மட்டும் நினைவினில் நிறுத்தி, அந்த மூச்சு போகும் வழி, வரும் வழியைக் கூர்ந்து நோக்குதல். இவைகளில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால் முக்கலையொன்றித்தல் (சூரிய, சந்திர, அக்கினி) தானாகவே கைவரும். இதையாவது செய்து பாருங்களேன்.
கைக்காட்டி மரமாய் நின்று வழிகாட்டிவிட்டேன். விதை விதைத்தாகிவிட்டது; நீர் தெளித்தாகிவிட்டது. முளைத்தால் பயிர்; இல்லையெனில் பதர்.”
காலம்தான் காலன். நாம் வீணாக்கும் ஒவ்வொரு நிமிடமும் எமன் ஓரடி நம்மை முன்னோகி வந்துகொண்டிருக்கிறான். கிடைக்காத மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது; வீணாக்காது செயலில் இறங்குங்கள்
68.கடவுளுக்கு ஓர் உருவம் கற்பித்து வணங்குதல் சரியா?
கடவுளுக்கு ஓர் உருவம் கற்பித்து வணங்குதல் சரியா? இந்தக் கேள்விக்கு சற்றே விரிவான விளக்கம் காண்போம்.
இறைவனோடு தொடர்பற்றுப் போய்விட்டதால் தனக்கென எந்த மதிப்பும் இல்லாமலும் போய்விட்டது என்ற உணர்வின் மேலோட்டம் மானுட உணர்வில் தோன்றுகிறது. எனவே கடவுட் கொள்கையானது இறைவனோடு மனிதன் உணர்வளவில் தொடர்பு கொள்ள ஏதுவாக அமையும் போதுதான் விரக்தி அல்லது நிலை தாழ்ச்சி அல்லது தனிமை ஆகிய உணர்வுகளின் பீடிப்பிலிருந்து விடுபட்டு நம்பிக்கையும் நிலை மேம்பாடும் ஆன்மத் தோழமையும் உணர முடிகிறது.
எனவே அனைத்தையும் அனைவரையும் தாண்டியவன் இறைவன் என்ற கொள்கை அவ்விறைவன் மனிதனோடு நேரடித் தொடர்பு கொள்ளும் சாத்தியத்தை ஏற்றுக் கொள்ளாது. மனிதனின் உணர்வு எல்லைக்குள் உணரப்படும் வகையில் தனக்கென வடிவும் இயல்பும் கொண்டவன் இறைவன் எனும்போது கடவுளைத் தான் நேரில் சந்திக்கும் உணர்வும் அவரோடு பேசும் உணர்வும் சாத்தியமாகின்றன. அவ்வாறான பாவனைகள் பக்திப் பாடல்களாகவும் இசையாகவும் பிரார்த்தனைகளாகவும் சடங்குகள் பாற்பட்ட வழிபாடாகவும் வடிவம் கொள்கின்றன. வடிவும் குணமும் பாற்பட்டவன் அல்லன் இறைவன் எனும்போது அவ்வாறான சமயத் தொடர்புக்கு வழியில்லாது போகிறது. அப்படியே அவற்றைப் பாவனை செய்து கொள்ளும் போதும் பொருளற்றுப் போகின்றன. எனவே மனிதனின் இறைஉணர்வு வடிவும் இயல்பும் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. அப்போது சமய உணர்வு பொருள் பொதிந்ததாகவும் மதிப்புடையதாகவும் அமைகிறது. அப்படியானால் இறை உணர்வு என்ற மனோபாவம் பற்றிய சம்பவம் மனத்தளவில் நம்பிக்கைக்கும் நிலை மேம்பாட்டுக்குமான ஏக்கத்துக்கு ஓர் விடையாகிறது.
அப்படி இறைவனுக்கு வடிவும் இயல்பும் சார்ந்த நிலை கற்பித்த போது அவரோடு தொடர்பு கொண்ட கடவுளர் என்ற கொள்கையும் வடிவு கொண்டது. இப்படியாகத்தான் கோயில் வழிபாடும் கோயில் அமைப்பு சார்ந்த கலையும் பிரமாதமான கலை வடிவம் கொள்ள வந்தன. சதுரங்களுக்குள் சதுரமாகக் கோயில்கள் கட்டப்பட்டன. உட்சதுரம் கருவறையாக அமைந்தது. ஒவ்வொரு சதுரத்துக்கும் இடையே இருக்கும் இடம் பிரகாரம் எனப்பட்டது. பிரகாரம் ஒவ்வொன்றையும் சுற்றிக் கடைசியாகக் கருவறை சென்று இறைவனை வழிபடும் வழக்கம் வந்தது. அவ்வாறான பிரகாரம் ஒவ்வொன்றுக்கும் இறைவனோடு தொடர்பு கொண்ட பிற கடவுளருடனான தொடர்பு கற்பித்தார்கள். இந்தச் சூழலில் வைத்தே திருப்பாவையின் பதினேழு முதல் இருபத்திரண்டு வரையிலான பாடல்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
நன்றி: நண்பர் இரமணி நாயுடு










