Category Archives: ஞானம்

சிவ வாக்கியம் – 520

சிவவாக்கியர் பாடல்கள் - 520                                ***********************************************

520.சிவாயவசி என்னவும் செபிக்கயிச் சகமெலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவான மாளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ யாகுமே.

 

சிவாய வசி என்று ஓதித் தவமிருக்க, இந்த உலகமெல்லாம் நம் வசம் ஆகும்; சர்வ சித்திகளும் கிட்டும்; நம் உடலில் உள்ள ஆகாயத் தலத்தில் நடனமாடும் ஈசனைச் சேர்ந்து அவ்வானம் ஆளலாம். சிவாய வசி என்பது இருதலைத் தீயாகும். அதுவே ஈசனாம் சோதியாகும்.

சிவ வாக்கியம் – 519

சிவவாக்கியர் பாடல்கள் - 519                                 ***********************************************

519.மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊரெங்கும் சுற்றிதிண்டிக்கே யலைபவர்
இனமதில் பலர்கள்வையும் இன்பமற்ற பாவிகள்.

 

பெரும்பாலும் இவ்வுலகில் வாழுவோர், ஈசனை அடைய வேண்டும் என்னும் தளர்வு இல்லாத திட நம்பிக்கை இல்லாத மடமை பொருந்திய மாடுகளைப் போன்று வாழ்ந்து பிணமாகப் போகும் மனிதர்கள். கோபம் அடைவார்கள். பிறர் பொருளை ஏமாற்றி, யாரும் அறியாதவண்ணம் சேமித்து வைத்து யாருக்கும் சொல்லாமல் எதற்கும் பயனின்றி மடிந்து போவார்கள். தினந்தோறும் ஊரெல்லாம் சுற்றி சோற்றுக்கு அலைபவர்கள். இவர்களின் இனத்திலேயே பலர் வசைபாடும் இன்பமில்லாத பாவிகள்.

சிவ வாக்கியம் – 518

சிவவாக்கியர் பாடல்கள் - 518                                ***********************************************

518.சாத்திரங்கள் பார்த்துப்பார்த்து தான்குரு டாவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள்
பாத்திர மறிந்துமோன பக்திசெய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தராவர் அங்ஙனே.

 

உண்மையான அருத்தம் தெரியாது, சாத்திரங்களைப் பார்த்துப் பார்த்து அதன்படியே நடந்து, கண் இருந்தும் குருடராய் இருளிலேயே இருக்கின்றீர்கள். சூரிய வணக்கம் செய்கிறேன் என்று மந்திரங்களை ஓதி, சூரியனை நேருக்கு நேராகப் பார்த்துக் கண்களைக் குருடாக்கிக் கொள்ளும் முட்டாள்களே! நம் உடலில் உயிர் இருக்கும் பாத்திரம் கண்கள். அதற்குள்ளே சென்று தவமிருக்க மவுன நிலை கிட்டும். எப்படித் தவமிருக்க வேண்டும் என்னும் சூத்திரப்படி தவமிருக்க அனைவரும் சுத்த ஞானிகளாவார்கள்.