பிரபுலிங்க லீலை – 5.1 to 5.5
5. பிரபுதேவர் வந்த கதி
***********************
இக்கதிக்கண், அல்லமதேவர், மாயை பூசனை புரிந்து கூத்தியற்றிக் கொண்டிருந்த இடத்திற்கு அழகிய வடிவங்கொண்டு செல்கிறார். மிக வியக்கத்தக்க முறையில் மத்தளத்தை அடிக்கிறார். மத்தளவொலி மாயையின் காதிற்படுகிறது. ‘இவ்வாறு சிறந்த முறையில் மத்தளம் அடிப்பது யாரென்று பார்த்து வாருங்கள்‘ என்று தோழிகள் சிலரை ஏவுகிறாள். தோழிகள் சென்று அல்லமதேவரைக் காண்கிறார்கள். அவருடைய அழகு அவர்களுடைய உள்ளத்தை கவருகிறது. அவர்கள் திரும்பிச் சென்று மாயையிடஞ் செய்தியைச் சொல்லுகிறார்கள். மாயை அல்லமதேவரை அழைப்பிக்கிறாள். அல்லமதேவருடைய அழகு மாயையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. மாயையின் உயிர்தோழிகள் மாயையின் உள்ளப் போக்கை உணர்ந்துகொண்டு அல்லமதேவரைத் தங்களுடன் தங்கியிருக்குமாறு வேண்டிக்கொள்ளுகிறார்கள். அதன்பொருட்டு அரசனுடைய உடன்பாட்டையும் பெறுகிறார்கள். அல்லமதேவர் அவர்களுடன் தங்கியிருத்தற்கு மிகவரிதில் உடன்படுகிறார். மாயைக்கு அல்லமதேவரிடம் காமக் காழ்ப்பு அதிகரிக்கிறது. மதமானி என்பவள் அல்லமதேவரிடஞ் சென்று அவருடைய உள்ளப்போக்கை மெல்ல ஆராய்கிறாள். மாயைக்குத் தக்கபடி பக்குவமாகப் பேசுவதில் வல்லவராகிய அல்லமதேவர், மாயைக்கு இணங்குபவரைப்போலக் குறிப்புக்காட்டி நயமாகப் பேசுகிறார். சில நற்குறிகளைக் கண்டு மாயையின் தோழிகள் மாயையின் எண்ணங் கைகூடுமென்று மாயைக்குக் கூறுகிறார்கள். மதமானி என்பவள் திரும்பிவந்து அல்லமதேவரின் உடன்பாட்டைத் தெரிவிக்கிறாள். அவள் மொழி மாயைக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசனுக்குத் தெரியுமாயின் எப்படி முடியுமோவென்று தோழிகள் அஞ்சுகின்றார்கள். பகற்காலம் போய் மாலையும் இரவும் வருகின்றன. காமங் கைம்மிகப்பெற்ற மாயை, திங்களையுந் தென்றலையுங் காமனையும் வெறுத்துப் பலவாறு புலம்புகிறாள். மதமானி அல்லமதேவரை அழைத்து வந்து ஓர் அறையில் தங்கியிருக்கச்செய்து மாயையை அங்கு அனுப்புகிறாள். மாயை அல்லமதேவரைத் தழுவுவதற்கு முயல்கிறாள். அல்லமதேவரின் உருவம் கட்புலனாகின்றதேயன்றி மாயையின் கைக்குப் பிடிபடவில்லை. அல்லமதேவரைத் தழுவச் செய்த முயற்சிகள் பலனளியாமல் மாயை களைத்து வாடி உறங்குகின்றாள். கனவின்கண் அல்லமதேவரைத் தழுவினதுபோலக் காண்கிறாள். இச்செய்திகள் தோழிகள் சிலரால் மோகினிக்குத் தெரிகின்றன. மோகினி மாயையின் இருப்பிடம் போந்து அவளுடைய செய்கைகளைக் கண்டிக்கிறாள். பிறகு, அல்லமதேவரைத் தழுவுவதற்குத் தன்னுடைய உடன்பாட்டைத் தெரிவிக்கிறாள். ‘மணமாகும்வரை மன்னனுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருங்கள்‘ என்று சொல்லிச் செல்லுகிறாள். சகளை யென்பவள் அல்லம தேவரை வெளியே வைத்திருக்க வேண்டுமென்று எண்ணி, அவரிடஞ்சென்று தனித்துறையுமாறு கூறுகிறாள். அல்லமதேவரோ, மாயையைப் பிரிந்து தனித்து இருக்கமுடியாதென்று கபடமாகப் பதிலுரை கழறுகின்றார். வழக்கம் போல் மத்தளம் அடித்தலாகிய தம்முடைய தொழிலைச் செய்துகொண்டிருக்கிறார். இச் செய்திகள் இக்கதியில் விரிவாகக் கூறப் பெறுகின்றன.
பிரபுலிங்க லீலை - 5.1
**********************
நூலாசிரியர் கூறல்
******************
நிரந்தரம் அடியார் வேண்டும் நினைவெலாம் நிரப்பா நின்ற
பெருந்தகை அல்ல மையன் பெயர்ந்தொரு மனிதனாகி
வருந்துறு மயல்ம னத்தால் வந்தனை புரிந்தாள் தன்பால்
பொருந்துறு பவன்போற் செய்த புணர்ப்பினைப் புகன்று ரைப்பாம்
நிரந்தரம் - எப்பொழுதும்.
வேண்டும் - விரும்பும்.
நினைவு - வண்ணம்.
நிரப்பாநின்ற - முடிக்கின்ற.
வந்தனை - வழிபாடு.
புணர்ப்பினை - சூழ்ச்சியாகிய செயல்களை. பொருந்துறுபவன்போல் - கூடுவோன்போல்.
புகன்று - விரும்பி.
எப்பொழுதும் நினைவில் வேண்டும் அடியவர்கள் விரும்பும் வண்ணம் முடிக்கின்ற அல்லமனாகிய சிவன் மனிதனாக உருக்கொண்டு, மையல் மனத்தால் வழிபாடு புரிந்த மாயையின்பால் கூடுபவன் போல் செய்த சூழ்ச்சியான செய்திகளைக் விரும்பி உரைப்பேன்.
பிரபுலிங்க லீலை - 5.2
***********************
அல்லமதேவர் மத்தளக்காரனாதல்
**********************************
தாமுறு நுகர்வும் வீடுந் தந்திட வல்லன் தானே
ஆமென இயம்ப லாலே அல்லம தேவன் உண்மை
நாமமும் மறைய வேறோர் நாமமுற் றம்மா யைக்குக்
காமிய வினைப்ப யன்றான் கடைப்பிடித் தருள எண்ணி.
தாம் உறும் - உயிர்கள் தாம் நுகரும்.
நுகர்வு - இன்ப பேறு.
காமிய வினை - உள்ளத்தின்கண் பயனைக் கருதிச் செய்யுங் காரியங்கள்.
கடைபிடித்து அருள எண்ணி - உறுதியாக அருளிச்செய்ய நினைத்து.
மாயைக்கு உள்ளத்தின்கண் பயனைக் கருதிச் செய்யுங் காரியங்களை உறுதியாக அருளிச்செய்ய நினைத்து, உயிர்கள் தாம் நுகரும் இன்பப் பேறு, வீடுபேறு அருளவல்ல சிவன், தன் உண்மைப்பெயரை மறைத்து, அல்லம தேவன் எனும் பெயர் கொண்டு தோன்றினான். காமிய வினையால் இன்பப்பேறும், நிட்காமிய வினையால் வீடுபேறும் உண்டாம்.
பிரபுலிங்க லீலை - 5.3
**********************
அழகிய வடிவங்கொள்ளுதல்
*****************************
கதந்தரு திருநு தல்தீக் கண்ணினால் நீறு பட்ட
மதன்செயல் செய்ய அன்னோன் வடிவுதான் கொண்ட தென்ன
முதிர்ந்தழ கொழுகும் ஆறு முகங்களுட் சிறந்த ஒன்றோ
டெதிர்ந்துள முருகன் என்ன இளமையோ டழகு வாய்ப்ப.
கதம் - வெம்மை, கோபம்.
மதன் செயல் செய்ய - காமனது தொழிலைச் செய்தலுக்காக. முதிர்ந்து - முற்றி.
வாய்ப்ப - பொருந்த.
வெம்மை வெளிப்படுத்தும் தீக்கண்ணால் சாம்பலாகிய மன்மதனின் தொழில் செய்ய அவனின் வடிவெடுத்தானோ ! இல்லை; ஆறுமுகனின் ஆறு முகங்களில் அழகான முகங்கொண்டு அவதரித்தானோ!
பிரபுலிங்க லீலை - 5.4
***********************
கோலத்தின் சிறப்பு
******************
அவிர்சடை முனிவர் மாதர் அழுங்குறக் கொண்ட கோலம்
கவினுமிவ் வடிவங் கொள்ளக் கற்றுமுன் விட்ட தென்னக்
குவிமுலை மகளிர் ஆவி கூட்டுணுங் கோலம் என்னப்
புவியுறும் இரவி யென்னப் பொங்கொளி உருவொன் றுற்றான்.
அவிர் சடை - விளங்குகின்ற சடை.
அழுங்குற - மயங்கி வருந்த.
கவினும் - அழகு செய்யும்.
கூட்டுணும் - கொள்ளை கொண்டுண்ணும்.
புவி உறும் இரவி - நிலவுலகில் வந்த கதிரோன்.
பொங்கு ஒளி உரு - மிகுந்த அழகுடைய உருவம்.
சடாமுடியுடன் விளங்கும் முனிவர்களின் பத்தினிகள் மயங்கி வருந்திய கோலம். குவிந்த முலைகளையுடைய மாதர்களின் ஆவி போக்கும் கோலம். சூரிய, சந்திரர்களைத் தோற்கடிக்கும் கோலம்.
முன் சிவபிரான் தாருகாவனஞ் சென்றபொழுது எடுத்த அழகிய வடிவம்; இப்பொழுது எடுத்துள்ள கோலத்தைக் கொள்வதற்கு முன்னால், பழக்கஞ்செய்து வைத்ததைப்போன்றது என்க. இதனால் இக்கோலம் மிகுந்த பேரழகுடையது.
பிரபுலிங்க லீலை - 5.5
************************
திருமுக அழகும் திருமயிர் அழகும்
************************************
விளிம்புற நடுக்க ளங்கம் வீழ்ந்துசூழ் மதியொன் றுண்டேல்
வளங்கெழூ மயிரொ ழுங்கு வள்ளல்வாள் முகநி கர்க்கும்
துளங்குறும் உந்தி மேற்போய் மார்பிடைத் தோன்று ரோமம்
இளங்கரு நளினம் உண்டேல் ஏய்க்குமென் றியம்ப நின்றான்.
விளிம்பு - ஓரம்.
நடுக் களங்கம் - (மதியின்) நடுவிலுள்ள மறு.
துளங்கு உறும் - ஒளி செய்கின்ற.
உந்தி - கொப்பூழ்
கரு நளினம் - கருந்தாமரை.
ஏய்க்கும் - ஒக்கும்.
அல்லமனின் முடிதவழும் முகம், ஓரத்தே கரு நிழல் கொண்ட சந்திரனை ஒத்ததாம். தொப்பூழின் மேல் மார்பில் கிடந்த முடியானது கருந்தாமரையை ஒத்ததாம்.
விளிம்பில் களங்கமுள்ள திங்களும், கருந்தாமரையும் யாண்டும் இன்மையால் இஃது இல்பொருளுவமை.










