...

பிரபுலிங்க லீலை – 4.56 to 4.59

பிரபுலிங்க லீலை - 4.56

*************************

இளைஞர்கள் செயலற்றிருத்தல்

********************************

பற்றுமன மோடியிரு பார்வையினு மெய்தி

மற்றைய புலன்களை மறந்து நடமாடும்

பொற்றொடியை நண்ணவுயர் பொன்மதி லுறுப்பின்

உற்றபொறி போலசை வொழிந்திளைஞன் நின்றார்.

பற்றும் - பலவற்றையும் பற்றும்.

இளைஞர் மனம் கண்வழியாகச் சென்று, மற்றைப் புலன்களை மறந்தமையால் வேறு செயலற்றிருந்தனர். அவர் செயலற்றிருந்தமைக்கு உவமை மதிலுறுப்பின் பொறி.

 

பிரபுலிங்க லீலை - 4.57

************************

கூத்துமுடிந்தபின் சேடம் பெறுதல்

**********************************

இளங்கொடி மருங்குலவள் இன்னணம் நடிப்பக்

களங்கனியை வென்றமணி கண்டனை அருச்சித்

துளங்குளிர் அருந்தவன் உவந்திறை அணிந்த

வளங்கெழுமு சந்தமலர் மாலையொ டளித்தான்.

 

கொடி மருங்குல் அவள் - கொடி போன்ற இடையையுடையவள்.

களங்கனி - களாப்பழம்.

மணிகண்டன் - கரிய கழுத்தையுடைய இறைவன்.

அருந்தவன் - கோயிற் பூசகன்.

வளம் கெழுமு - வளம்பொருந்திய.

சந்தம் - சந்தனம்.

கொடிபோன்ற இடையையுடைய மாயை இங்ஙனம் நடித்து கரிய கழுத்தை உடைய இறைனனைப் பூசித்தபின், கோயிற் பூசகன், இறைவன் அணிந்த மலர் மாலையுடன் சந்தனமும் சேடமாக(பிரசாதமாக) அளித்தான்.

 

பிரபுலிங்க லீலை - 4.58

*************************

சேடம் பெற்றபின் அரங்கில் இருத்தல்

**************************************

வணங்கிமது கேசனிரு மாலியம் தேற்றங்

கணங்குமட வாருடன் அரங்கிடை யிருந்தாள்

நுணங்கிழை மருங்குல்மிகு நோமென விரைந்து

பிணங்குறு சதங்கையழு பிள்ளையின் அடங்க.

 

நிருமாலியம் - இறைவனைப் பூசித்துக் கழித்த பொருள்கள். அங்கு - அவ்விடத்தில்.

அணங்கு - மாயை.

அரங்கு - கூத்தியற்றும் இடம்.

நுணங்கு இழை மருங்குல் - நுண்ணிய நூல் போன்ற இடை. பிணங்குறு சதங்கை - பிணக்குற்ற சதங்கை.

அழுபிள்ளையின் அடங்க - அழுதபிள்ளை அடங்கியிருந்தாற்போல் அடங்கியிருக்க சதங்கை ஒலி அடங்கியது. அழுதபிள்ளை ஒடுங்கியதுபோலும் என்றார் ஆசிரியர்.

இறைவனைப் பூசித்த பின், சேடியருடன் மாயை நடன அரங்கில் இருந்தாள். அப்போது காலில் இருந்த ஆடிய சதங்கை ஆரவாரமற்று அமைதியாய் அழும் பிள்ளை அழுகையை நிறுத்தியதுபோல் இருந்தது.

 

பிரபுலிங்க லீலை - 4.59

*************************

மாயையின் வழிபாட்டை அல்லமதேவர் அறிதல்

************************************************

மைத்தட நெடுங்கணிள வல்லிநிகர் மாயை

பத்தியொரு டருச்சனை பயின்றதை அறிந்தான்

நித்தனுல கெங்கணு நிறைந்தவன் அனாதி

முத்தனருள் அல்லம முதற்பெயரி னானே.

 

மை - மை இடப்பெற்ற.

தடம் நெடுங்கண் - அகன்ற நீண்ட கண்கள்.

பத்தி ஒடு - அன்போடு.

அருச்சனை பயின்றதை - வழிபாடு செய்ததை.

அநாதிமுத்தன் - இயல்பாகவே பந்தங்களில் நீங்கியவன்.

நித்தன் - அழியாதவன்.

மைதீட்டப்பட்ட அகன்ற நீண்ட கண்களையுடைய மாயை பக்தியோடு அருச்சனை செய்ததை, இயல்பாகவே பந்தங்களில் நீங்கியவனும், அழிவில்லதவனுமாகிய இறைவனாம் அல்லமன் அறிந்தான்.

 

நான்காவது மாயை பூசை கதி முடிந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>