...

தாகி பிரபம்-2

இறை கேட்டது: உமக்கு நாசியிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் நாசியாயிருந்தது.

இறை கேட்டது: உமக்கு வாயிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் வாயாயிருந்தது.

இறை கேட்டது: உமக்கு ஆக்கையிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் எனதாக்கையாயிருந்தது.

இறை கேட்டது: இப்படியே பரிபூரணமாயிருந்தபோது, உமக்கு ஆரம்பமும் முடிவுமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். ஆரம்பமும் முடிவுமிருந்தன.

இறை கேட்டது: அது என்ன?

யான் விடுத்தது : இறைவா, நானே பரிபூரணமானபோது பரிபூரணமான எனக்கு நானே ஆரம்பமும் முடிவுமானேன்.

இறை கேட்டது: நான் எனும் பரிபூரணத்திற்கு உள்ளும் புறமுமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். இருந்தனவே.

இறை கேட்டது: அஃது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, அதுவே (பரிபூரணம்) தானே அதற்கு உள்ளூம் புறமும்.

இறை கேட்டது: அதற்குத் திக்குத் திசைகளிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். இருந்தன. அதற்குத் திக்குத் திசைகளும் அதுவே தானே.

இறை கேட்டது: அதற்கு மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாம் அதற்கு அதுவே யாயிருந்தன.

இறை கேட்டது: பரிபூரணத்திற்கு இவ்வளவுதான் என்னும் மட்டும் அளவும் கனமுமுண்டா?

யான் விடுத்தது : இறைவா, பரிபூரணம்(நான்) அளவிட முடியாதது; நிறையிட முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு. அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை.

இறை கேட்டது: அதற்கு(பரிபூரணத்திற்கு)க் கால எல்லையுண்டா? முடிவு உண்டா?

யான் விடுத்தது : இறைவா, இல்லையே.

இறை கேட்டது: அப்படியானால் அதன் நிலை என்ன?

யான் விடுத்தது : இறைவா, அது நான் நீயாகவே நிலை பெற்றிருக்கும்.

இறை கேட்டது: அவ்வாறு நிலைபெறும் எனக்கும் உமக்குமிடையே வித்தியாசங்களுண்டா? வேறுபாடுகளுண்டா?

யான் விடுத்தது : இறைவா, அது நான், நீ, அது, இது, அவள், அவன், அவர்கள், இவர்கள், நீங்கள், நாங்கள் எனும் வேறுபாடின்றி நிலை பெற்றிருக்கும்.

இறை கேட்டது: வானம், பூமி, சூரியன், சந்திரன் முதலியனவை எல்லாம் பூரணமாய் என்னிலிருந்துதானே வெளியாயின?

யான் விடுத்தது : இறைவா, ஆம். அது, நீ, நான், எனது, உனது, என், உன், என்றில்லாத உன்னிலிருந்துதான் வெளியாயின.

இறை கேட்டது: என்னிலிருந்து என்று யான் கூறியதன் தாற்பரியத்தைக் கூறுவீரா?

யான் விடுத்தது : ஆம், இறைவா. நீயாகவே வெளியானாய் என்பதை நீ மறைத்துக் கூறுகிறாய்.

இறை கேட்டது: சிருஷ்டிப் பொருட்கள் எனக் கூறப்படுவன எவை?

யான் விடுத்தது : இறைவா, யார் சிருஷ்டித்தார்? நீயிருந்து நீயல்லா வேறு பொருள்களச் சிருஷ்டிப்பின், உனக்கும் பொருள்களுக்கும் இடையே வேறுபாடுண்டல்லவா? அதுதானே இணையென்பது? ஆதலால் நீயாகவேயிருந்து உன்னிலிருந்து வெளியானவற்றைத்தான்
சிருஷ்டிகள் என்கிறோம்.

இறை கேட்டது: அப்படியாயின் எனக்கும், என்னிலிருந்து வெளியானவைகளுக்குமிடையே வேற்றுமையுண்டா?

யான் விடுத்தது : இறைவா, உனக்கும் உன்னிலிருந்து வெளியான சிருஷ்டிகளுக்குமிடையே எவ்வேறுபாடுமில்லை. நீ முன்னிருந்தது போன்றே இப்போதுமிருக்கிறாய்.

இறை கேட்டது: என்னிலிருந்தே வெளியான மனித இனம், என்னை மறந்து விட்டதே?

யான் விடுத்தது : இறைவா, உண்மைதான். வெளியாகும்வரை நானும் நீயும் வேறில்லை. ஒன்றேயென்று கூறிக்கொண்டிருந்த மனித இனமெல்லாம், இப்போது நீயார்? நான்யார்? நீயும் நானும் ஒன்றல்லவே எனக்கூறிக் கொண்டிருக்கின்றன. தாய் தந்தையரை அறியா, தாய் தந்தையர் இல்லா மக்களைப் போன்றுதான் இவர்கள் உள்ளனர்.

இறை கேட்டது: மனித இனமல்லாத மற்ற இனங்களின் நிலையென்ன?

யான் விடுத்தது : இறைவா, அவையெல்லாம் உன்னில்தானே உள்ளன. அவை உன்னிடத்தே நீயாகி வணக்கம்செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இறை கேட்டது: என்னில்தான் அவையிருக்கின்றன என்பதற்கும் அவை என்னில் நானாய் வணக்கம் செலுத்துகின்றன என்பதற்கும் நீர் கண்ட முக்கியத் தத்துவம் யாது?

யான் விடுத்தது : இறைவா, அவை சிருஷ்டி என அறியாமல் முன்னிருந்த நிலையிலேயே உள்ளன. உன்னிலிருந்து நீயாகவே அவை வெளியாகியும், அவை வெளியாகிய தன்மையைஅறியவில்லை. அவற்றிற்கு புத்தியில்லையே! (மனிதனைப் போன்று) சிந்தனையுமில்லையே! அதற்கு நல்லது, கெட்டதும் தெரியவில்லையே! இது கூடும், இது கூடாது என்பனவும் தெரியவில்லையே. அவற்றிற்கு விதிவிலக்கள்களும் (விதிவிலக்கல்களும்) இல்லையே. கையால் அவைகளின் வணக்கம் தாமே தம்மையறியாத அவையே நீயான நிலையில் வணக்கம் செலுத்துகின்றன.

இறை கேட்டது: மனித இனத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்?

யான் விடுத்தது : இறைவா, குழந்தை பிறந்தபோது அது பூரணத்திலிருந்து (உன்னிலிருந்து) பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் நீயாகவே யிருந்தது. அதற்குச் சிந்தனை இருக்கவில்லை. எந்தப் பொறுப்பும் இருக்கவில்லை. தெய்வீகக் கடாட்சம் அதற்கு இருந்தது. அது உன்னிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை. அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும் இருக்கவில்லை. உன்னில் நீயாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினைபுரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப்பெறவும், நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று. தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. விதிவிலக்குகளும் உண்டாயின. அது மனிதனாயது. தன் முன்னைய நிலையை மறந்து நான் வேறு, நீ வேறு எனும் பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான். தான் மனம் போன போக்கில் போகவும், அழிவு வேலைகள் செய்யவும், உண்மைக்கு மாறாக நடக்கவும், மானிட நேயம், ஐக்கியம், இரக்கம் முதலானவைகளை உதறித் தள்ளிவிடவும் முற்பட்டு மறமாந்தனாய் மாறிவிட்டான். உன்னிலிருந்து வேறுபட்டு விட்டான். இதனால், தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான். தன்னை மறந்துவிடாது, தன்னையறிந்து வாழப்படைக்கப்பட்ட மனிதன், இந்நிலையடைந்தமையால், தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டான். தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன், பூரண மனிதனானான்.

இதை மறுத்தவன் மறுப்பாளனானான்.(காபிரானான்)

இறை கேட்டது: வந்த பாதை எது?

யான் விடுத்தது : இறைவா, உன்னிலிருந்து எவ்வாறு மாற்றமடைந்து வந்தானோ அதுதான் அந்தப் பாதை.

இறை கேட்டது: அவன் தன்னை யெப்படி அறிதல் வேண்டும்?

யான் விடுத்தது : இறைவா, அவன் தன்னைப்பற்றிச் சிறிதேனும் சிந்திக்கவேண்டும். தான் வயோதிபனானமையும் அதற்கு முன்னிருந்த குழந்தைப் பருவம் பற்றியும் சிந்தித்தல் வேண்டும்.

இறை கேட்டது: அதன் முன் அவனது நிலையென்ன?

யான் விடுத்தது : இறைவா, அது சிசுவாகத் தன் தாயின் கற்பவறையிலிருந்தது. அதற்கு முன் தாயின் கற்பவறையில் சிறு கருவாய்த் தங்கிற்று.

இறை கேட்டது: இஃது எவ்வாறு உண்டாயது?

யான் விடுத்தது : இறைவா, இஃது தாயினதும், தந்தையினதும் சத்துப் பொருளில் இருந்து உண்டாயது.

இறை கேட்டது: இதற்கு முன் அது எங்கிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, தாயினதும் தந்தையினதும் முதுகந்தண்டிலிருந்தது.

இறை கேட்டது: அது எப்படி இவ்வாறாயது?

யான் விடுத்தது : இறைவா, தாயும் தந்தையும் கூடினமையால் இவ்வாறுண்டாயது.

இறை கேட்டது: அது அங்கே எப்படியிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, அது சத்துப்பொருளாயிருந்தது.

இறை கேட்டது: இச்சத்துப் பொருட்களை இவர்கள் எங்கிருந்து பெற்றனர்?

யான் விடுத்தது : இறைவா, இவர்களைச் சூழ்ந்துள்ள பொருள்களிலிருந்து பெற்றுக் கொண்டனர்.

இறை கேட்டது: அப்பொருள்கள் யாவை?

யான் விடுத்தது : இறைவா, அவை தாவரப் பொருள்களும், மிருக இனங்களும், மீன் வகைகளும், பட்சி இனங்களும், தட்ப வெப்பங்களும், காற்று முதலான மற்றுமுள்ளவைகளும்.

இறை கேட்டது: இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?

யான் விடுத்தது : இறைவா, இவையெல்லாம் பஞ்ச பூதங்களிலிருந்து வெளியாயின.

இறை கேட்டது: பஞ்ச பூதங்களெல்லாம் எவை?

யான் விடுத்தது : இறைவா, அவையெல்லாம் இயற்கை.

இறை கேட்டது: அப்படியானால் செயற்கை யென்பது என்ன?

யான் விடுத்தது : இறைவா, இயற்கைப் பொருள்களை ஒன்று கூட்டி இயற்றியவைகளே செயற்கை.

இறை கேட்டது: அப்படியாயின் செயற்கையும் இயற்கைதானே?

யான் விடுத்தது : இறைவா, ஆம். செயற்கையும் இயற்கைதான்.

இறை கேட்டது: அவ்வாறாயின் இயற்கை எங்கிருந்து வந்தது?

யான் விடுத்தது : இறைவா, பஞ்ச பூதங்களிலிருந்து இயற்கை வெளியாயிற்று. பஞ்ச பூதங்களும் இயற்கையே.

இறை கேட்டது: இப்பஞ்ச பூதங்களெல்லாம் எங்கிருந்து வந்தவை?

யான் விடுத்தது : இறைவா, இவையெல்லாம் வானின்றிழிந்தவைகளே.

இறை கேட்டது: அப்படியாயின் என்ன?

யான் விடுத்தது : இறைவா, பரந்து விரிந்து நிறைந்து தன்னை வெளிப்படுத்தும் நிலையிலிருந்த அதிலிருந்து வந்தவை. இஃதுமியற்கையே.

இறை கேட்டது: இதற்குமுன் இஃது எங்கிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, அகண்டகாரமாய்ப் பரிபூரணமாய் விரிந்து நிறைந்து தனக்குத் தானே காட்சியாய் மற்றவை யெனவில்லாததாய் மறைந்தும் மறையாததாய் அசையாததாய் துணையில்லாததாய் தனித்துவமாய் ஒன்றாய் இடைவெளியற்று யாங்குமாய்ப் பேதமின்றிப் பிரிவின்றிக் கலந்துறைந்த ஒன்றிலிருந்தே வெளியாயது.

இறை கேட்டது: இதற்குமுன் எது இருந்தது?

யான் விடுத்தது : இறைவா, இதற்கு முன்னும் இதுவேதான் இருந்தது. வேறொன்றுமிருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லையே. இதுவே நித்தியம். இதுவே சத்தியம்.

இறை கேட்டது: நித்திய சத்தியமென்பதென்ன?

யான் விடுத்தது : இறைவா, அது என்றும் நிலைத்து நிற்பது. அதற்கு அன்றும், இன்றும், என்றுமே அழிவுமில்லை. மாற்றமுமில்லை, குறைவதுமில்லை, கூடுவதுமில்லை. எல்லாம் பரி பூரணம்.

இறை கேட்டது: அஃறிணைப் பொருளில் அது என்கிறீரே, அது என்ன?

யான் விடுத்தது : இறைவா, அது, இது, அவைகள், இவைகள், அவன், இவன், அவர், இவர், அவள், இவள், இவர்கள், அவர்கள், (இவர்கள்), நான், நாம், நீ, நாங்கள், நீங்கள், முதலான தன்மை, முன்னிலை, படர்க்கை, பன்மைகள் யாவுமற்ற மொழிதற்கியலாத ஒன்றே அந்த தனித்த வொன்று; அதனை அழைக்க எந்த வார்த்தையும் இல்லாத ஒன்றே அதுவான பரிபூரணம்.

இறை கேட்டது: ஒன்று என்பது எது?

யான் விடுத்தது : இறைவா, அதற்குப் பதிலாக அல்லது அதுபோன்ற அல்லது அதுபோன்ற எத்தனையோ இல்லாத, பிறக்காத, பிறப்பிக்காத, அனைத்துமே ஒன்றிலான, அனைத்துமே ஒன்றான அந்த ஒன்றே, அது.

இறை கேட்டது: மேலும் என்னை உம்மால் வருணிக்க முடியுமா?

யான் விடுத்தது : இறைவா, உன்னை வருணிக்க என் நா எழவில்லை. கடலுக்கும் எல்லையுண்டு. ஆயினும் உனக்கோ, உன் புகழுக்கோ எல்லையில்லை. உன் வருணிப்புக்கும் எல்லையில்லை. முடிவுமில்லை. எங்கும் நீ யாகிய பரிபூரணமே. எங்கு சென்றாலும், நீயாகிய
பரிபூரணமே. பிரபஞ்சம் கூடாது, குறையாது. அதற்கு எல்லையில்லை. அது நிறைகோற்போற் சமமானது. திணையோ, பாலோ, எண்ணோ அற்றவனீ. இடத்தினுக்கு இடனானாய், காலத்திற்குக் காலமானாய்.

இறை கேட்டது: என்னை நீர் புகழ்வதாலும், வருணிப்பதாலும், எனக்கு மதிப்புக் கொடுப்பதாலும், எனக்கு என்ன நன்மையுண்டு?

யான் விடுத்தது : இறைவா, நீ புகழுக்குப் புகழானவன். வருணிப்புக்கு வருணிப்பானவன். மதிப்புக்கு மதிப்பானவன். உன்னை எவன் புகழ்ந்தாலும், அப்புகழுக்கு எல்லையுண்டு. ஆனால், உன் புகழுக்கோ எல்லையில்லை. வருணிப்புக்கும் அவ்வாறே, மதிப்புக்கும் அவ்வாறே. நீ தேவையற்றவன். உனக்கு எதுவும் தேவையேயில்லை. அதனால் உனக்கு எந் நன்மையுமில்லை.

இறை கேட்டது: என்னை நீர் புகழ்வதாலும், எனக்கு மதிப்புக் கொடுப்பதாலும், வருணிப்பதாலும், உமக்கு என்ன நன்மையுண்டு?

யான் விடுத்தது : இறைவா, நான் உன்னைப் புகழும் புகழ்ச்சிகளும், மதிக்கும் மதிப்புகளும், வருணிக்கும் பண்புகளும், என்னையே வந்தடைகின்றன. அதுவே, யான் பெறும் நன்மைகள். உன்னை நான் இழிவு படுத்தினால் அதுவும் என்னையே வந்தடையும்.

இறை கேட்டது: என்னை ஒரு கூட்டம் மிகவும் மதித்து நடப்பதுபோலும், மரியாதை கொடுப்பதுபோலும் நடந்து கொள்கிறார்களே, இதன் உண்மையென்ன?

யான் விடுத்தது : இறைவா, உன்னையறிந்தவன் உன்னை மதித்தால் தானே அந்த மதிப்பு சிறப்புடைத்தாகும். அறியாதவன் உன்னை எப்படி மதிப்பான்? அதில் உண்மையில்லையே? உனக்குக் காலும் கையும் முகமும் வைத்து உன்னை இணைவைத்து வணங்குகிறவர்கள் உன்னை எப்படித்தான் அறியப் போகிறார்கள். அவர்கள் வணங்கும் வணக்கமும் வணக்கமல்ல. துதிக்கும் துதியும் துதியல்ல.

இறை கேட்டது: நீர் இப்படியே பரிபூரணமாய் இருக்க விரும்பினீரா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். இப்படியே இருப்பதோடு என்னை வெளிக்கொணரவும் விரும்பினேன்.

இறை கேட்டது: அப்போது பரிபூரணத்திற்கு என்னவாயது?

யான் விடுத்தது : இறைவா, அப்போது பரிபூரணம் சலனமடையத் தொடங்கிற்று.

இறை கேட்டது: சலனமென்பதென்ன?

யான் விடுத்தது : இறைவா, அது தோன்றவிருக்கும் நிலை.

இறை கேட்டது: அது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, அஃது யானென்னவிருந்தது, நாமாகத் தோன்ற இருந்த ஆரம்ப நிலை.

இறை கேட்டது: நான் வெளித்தோன்ற நினைத்தேன் என்கிறீரே அதன் தாற்பரியம் என்ன?

யான் விடுத்தது : இறைவா, நானெனக் கூறும் நீ வெளித்தோன்ற நினைத்ததாலேதான் நாம் வெளிவந்தோம். நாம் வராவிட்டால் உம்மை எப்படி அறிந்துகொள்ள முடியும்.

இறை கேட்டது: அப்போது என்ன நடந்தது?

யான் விடுத்தது : இறைவா, சிறிது சிறிதாய், முழுமை பிரியத் தொடங்கிற்று.

இறை கேட்டது: நானானது நாமானது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, நான் மிக நுணுக்கமாய்ப் பிரிந்தேன். நுண்ணணுக்களானேன். அப்படிப் பிரிந்த என்னிலிருந்தே, ஐம்பூதங்களும் பிரிந்தன. இதுவே, தான் நானாயிருந்த, நான் நாமானவாறு.

இறை கேட்டது: இஃதெல்லாம் என்ன?

யான் விடுத்தது : இறைவா, இவைகள்தாம் இயலாகத் தாமாயியன்ற இயற்கை.

இறை கேட்டது: இயற்கையென்பது என்ன?

யான் விடுத்தது : இறைவா, செயற்கையும் சேர்ந்த இயற்கையென்றேன்.

இறை கேட்டது: இதற்குமேல் வேறேதுமுண்டா?

யான் விடுத்தது : இறைவா, இல்லையென்றேன்.

இறை கேட்டது: இதனை வேறு என்னவெனக் கூறலாம்?

யான் விடுத்தது : இறைவா, இதனை, ஆரம்பம் முடிவற்ற, எதற்குமிணையற்ற, முழுச்சத்தியமான, பரிபூரணமான, பிரபஞ்சம் எனவும் கூறலாம்.

இறை கேட்டது: அப்படியாயின் என்னிலிருந்து நீர் வெளியாகாமல் இருந்தால் இந்தத் தோற்றமும் பார்வையும் இருந்திருக்கா என்பது உண்மையென்கிறீரா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். உண்மைதானே. என்னில் உன்னை நான் பார்க்கிறேன். நீ உன்னில் என்னைப் பார்க்கிறாய். இதிற்றான் நான், நீ என்னும் பிரிந்த பார்வை வந்தது. அதில் நான், நீ எனப்பாராமலும் முழுமையாகக் காண்பதே முழுமையாகும். நான் நீயாகவும், நீ நானாகவும், பிரிவின்றி எப்போதும் என்னில் உன்னையும், உன்னில் என்னையும், பார்த்துக் கொண்டிருப்பதே உண்மையான முழுத் தோற்றமாகும். இப்போதும், எப்போதும், யான் உன்னிலிருந்து வெளியான போதும் எல்லாத் தோற்றமும் ஒன்றேயெனக்கொண்டு பரிபூரணத்தில், கடலில் அலை கலப்பது போலக் கலந்து, இலயித்து, நிலைத்து, நிற்பதிலே இன்பம் கண்டிருப்பின், வெளியாகாதிருப்பினும், வெளித்தோன்றியிருப்பினும், இரண்டும் பிரம – இரண்டறக்கலந்த சூனிய அமாவான, அந்தகமான, தத்துவ மசி நிலையாகும். சூனியமாய் எப்படியிருந்தோமோ, அப்படியே இப்போதுமிருக்கிறோம் எனும் நிலை கொள்ளல் வேண்டும். அதுவே சாலச் சிறந்தது.

இறை கேட்டது: நான் ஏன் வெளிப்பட விருபினேன்?

யான் விடுத்தது : இறைவா, நீ வெளியானமையால் நாம் அளவுகடந்த நன்மை பெற்றோம். ஊமை போலிருந்த நாம், வெளிப்படையாகப் பேசத் தொடுத்தோம். பார்வையற்றவர்கள் போலிருந்த நாம் வெளிப்படையாய்ப் பார்க்கத் தொடுத்தோம். மறைந்திருந்த செயல்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின. பொது வாகவிருந்த நாம் தனித்துச் செயற் படத் தலைப்பட்டோம். கடல் நீர்போன்றிருந்த நாம் உப்பாகி உபயோகமானோம். வித்தாகியிருந்த நாம் ஆல் போல் விரிந்து உபயோகமானோம். மொட்டா யிருந்த நாம், பூவாகி எழிற்றோற்றங் கொண்டோம். வெற்று நிலமாகவிருந்த நாம், பூங்காவானோம். வண்ணத்தோற்றங் கண்டோம். இன்புற்றோம். தங்கத் தகடன்னவிண்தோன்றும் கதிரவனைக் கண்டோம். வெள்ளித்தட்டென விண் மிதக்கும் வண்ணத்தகடான வெண்மதியைக் கண்டோம். விண்ணில் விரித்த நீல நிறப்பந்தரெனத்திகழும் நீல வானில் முத்தங்கள் பதிக்கப்பட்டு மின்னிலங்கும் விண்மீன்களில் வண்ண அழகினைக் கண்டோம். பன்னிறங்கள் தோன்றிச் செக்கர் வானின் இயற்கை என்னும் கைவண்ணம் விளையாடும் திருவிளையாடலைக் கண்டோம். கடலைக் கண்டோம். மலையைக் கண்டோம். விளையக் கண்டோம். பச்சைப் பரமதாணி விரிக்கப்பட்ட தென்னத் தோன்றும் பசும் புற்றரையின் எழிலையும், வயனிலங்களின் வண்ண வடிவங்களையும் கண்ணுற்றோம். கண் குளிர்ந்தோம். பயனடைந்தோம். நாமும் நம்மையறிந்தோம். இவ்வள(வு) மகா சக்தி நம்மில் மறைந்திருந்ததை உணர்ந்தோம். நீயும் நானும் ஒன்றேயெனும் நித்திய நிலை யெய்தினோம். பெறும் பேறு பெற்றோம். இதுவே வெளியானதன் நன்மையெனக்கண்டு உனக்கு சாட்டாங்கம் செய்தோம். நிலை மாறாத இதே நிலையை எமக்கென்றென்றும் தந்தருள் பாலிப்பாயாக எனப்பிரார்த்தித்தோம். யாவும் ஊரே யாவருங்கேளிர் எனும் ஒற்றுமையும், எல்லாம் ஒன்றே எனும் ஒருமைத்துவமும், வேற்றுமையற்ற மனிதநேயமும், என்றென்றும் எங்கணும் மிளிர்க. ஞான மார்க்கம் எங்கணும் பரவ, மானிடவினம் ஒன்றேன ஞாலமெல்லாம் பறைசாற்றி சங்கநாதம் பரப்புவோம். ஞாலமெல்லாம், ஞான ஒளி பரவி , இன வேற்றுமைகளும் பகையும் பொறாமையும், பொய்யும் வேரறுந்து போகத் துணை புரிவோம்.

ஞானம் வாழ்க! வளர்க! மிளிர்க!
(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>