தாகி பிரபம்-1
தாகி பிரபம்
*************

ஆக்கியோர்:
பெருமதிப்பிற்குரிய அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹசனிய்யுல் ஹாஷிமிய் – இலங்கை
இவ்வறிய கருவூலத்தைப் பற்றி அளிமிகு தம்பி. திரு.இம்தியாஸ் எனக்குத் தனிமின்னஞ்சலில் முன்னர் எழுதியுள்ளார். அவர் எனக்கு அனுப்பியிருப்பதாகச்சொல்லப்படும் நூல் என் கைக்குக் கிடைப்பதற்கு முன்னரே அந்நூல், எனக்குஅறிவூட்ட, என்னைத் தேடி வந்தது இறையாணையோ? என் கொடுப்பினையோ? அறியேன்.
இவ்வரிய நூலைப்பற்றித் தம்பி. இம்தியாஸ், என் கருத்துக்களையும்
கேட்டிருந்தார். ஆனால், படிக்கும்பொழுது, ஒவ்வொரு சொல்லும் சொல்லும்கருத்துக்களும், மனுவுக்கும் ஆண்டவனுக்கும் உள்ள உறவைப் பற்றியும்,எப்படி இருந்தோம்? எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கப் போகிறோம்?என்னும் வினாக்களுக்கு விடைகளும் பொதிந்து கிடக்கும் இந்நூலுக்குக்கருத்துக் கூற எனக்கு அருகதையுள்ளதா? என எண்ணிப் பார்த்தேன்.
அப்படியே கூறினும் அது: “பாம்பைப் பார்த்து மண்புழுதானும் ஆடமுயன்றது”போல்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
இருப்பினும்:
“கல்லாத மூடன் கவிதை மொழியறியேன்
சொல்லால் தொடங்குகிறேன்…..”(தொழுகைநாமா)
“சிற்றடியானும் சொற்ற கவிகளின்
முற்றும் பிழை களிருந் திடினும்
கற்றவர்க ளிதை குற்ற மகற்றியே
பற்றுதலாகப் படிப்பீரே”(சுகிர்த மெய்ஞான சங்கீர்த்தனம்)
இக்கருவூலத்தை நான் மட்டிலும் அநுபவிக்க மனமில்லாமையாலும், பிரபம்
என்னும் ஞானத் தண்ணீர் வாய்க்கால் வழியோடி ஆங்கிருக்கும் புல்லுக்கும்பொசிய வேண்டும் என்னும் தாளாத ஆசையாலும், பெரியவர்(இந்நூலாசிரியர்)அவர்களிடமிருந்தும், தம்பி.இம்தியாஸிடமிருந்தும் முன் அநுமதி பெறாமல்இதைத் இணைய தளத்தின் குழுக்களிலுள்ள நண்பர்களுடன் பங்கிட்டுக்கொண்டமைக்கு அவர்கள் இருவரும் மன்னிப்பார்களாக.
“நம்மை மதிப்பதற்காக நாம் ஞானத்தை மக்களுக்கு கூறவில்லை” என்று
அடக்கத்தோடு ஆரம்பமாகும் இந்நூல் பல அரிய கருத்துக்களக் கூறுகிறது.
மார்க்கங்கள்(வழிகள்) நான்கு:
ஷரீஅத் – சரியை – தோல் – வித்து
தறீக்கத் – கிரியை – தசை – மரம்
ஹக்கீகத் – யோகம் – எலும்பு – பூ
ம்·றிபா – ஞானம் – மூளை – கனி
(முரீதுப் படலம் – 854)
ஞானம் என்றால் என்னவென அறிந்துகொள்ளத் துடிப்பவர்களுக்கும், சூபித்துவம்என்றால் என்ன என்றறியத் துடிப்போர்க்கும் இந்நூலில் (ற)சூல்
விடையிறுக்கும்.
சூபித்துவம்:
“லா இன்ன வலா அன்த”
“நானுமில்லை;நீயுமில்லை;இருப்பது இறைவன் ஒருவனே.”
இக்கருத்தை வலியுறுத்துகிறது இந்நூல்.
“தம்மைத் தாமே அறிவது பூரணத்துவம்.”
அதற்கு வழி:
‘மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
நினைவையொரு அம்பாக்கி நினைவேவ லெந்நாளோ”
(ஈரடி கொச்சகப் படலம் 451)
முகக்கண் மூடி அகக்கண் திறக்கக் குரு அவசியம்:
குருவின் முக்கியத்துவம்: பிசுமில் குறம்(பீர்முகமது அப்பா)
“வழியான குருவில்லாத வணக்கம் முழுதெல்லாம்
வையகத்தில் புருடனில்லாள் வாழ்ந்த சுகமொக்கும்
தெரியாத குருமாரின் திருமொழி கேட்பதுதான்
தெரிவையர்கள் குசறாவைச் சேர்ந்திருந்த துவமை
சரியான குருவில்லா வணக்கமுள தெல்லாம்
சாவலில்லாக் கோழி முட்டையிட்டது போலுவமை”
ஆகவே பெருமதிப்பிற்குரிய அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானாஅல் ஹசனிய்யுல் ஹாஷிமிய் அவர்களை (காணாதிருந்தும்) மானசீகக் குருவாகஏற்றுக்கொண்டு, அவர்களின் புனிதத் தாள் பணிந்து, இக்கருவூலத்தைஇணையத்தில் ஏற்றுகிறேன்.
“ஆரு மடிக்க வந்தால் அன்னைமுந்தி மீதில் மக்கள்
சேரு மதுபோற் புகுந்தேன் செய்யிதத்தே பாத்திமத்தே”
என்னும் ஞானத் தாலாட்டின் படி குருபிரான் அவர்கள் தாள் தஞ்சம் புகுந்தேன்.
குற்றங்குறை இருப்பின், எல்லோரும் என்னை சிறுபயலென நினந்து மன்னிக்க.
எல்லாம் படைத்தாளும் ஏகபெரியவனை எண்ணி மனதில் தொழுதுகொள்ளும்,
அன்புடன்,
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)
*********************
“மானுட உண்மையை அறிவதே ஞானத்தின் நோக்கம். மனிதனை மனிதனாக வாழவைப்பதேஷரியத். சாந்தியும் சமாதானமும் எங்கும் நிலவ, மனிதன் மனிதனாக, மனித நேயம்பேணி வாழ்ந்து, மானுட உண்மையை அறியவேண்டும்” என்று கூறி அவைகளையே
தமது குறிக்கோளாக வைத்துள்ளார் ஞானாசிரியர்.
ஞானாசிரியர் கருத்து:
இந்நூற் “றாகி பிரபம்” எனும் பெயருடைத்து. இதன் கருத்து,
தாகமுடையோருக்கான நீர்ப் பந்தர் என்பதாம்.
எவருக்கு ஞானத்தில் அளவற்ற தாகம்(பிரியம்) உள்ளதோ, அவருக்கிந்நூல் ஒருநீர்ப் பந்தர் எவ்வாறு தாகத்தை நீக்குமோ, அவ்வாறே ஞான வேட்கையைஇந்நூல் நீக்கிவிடும் என்பதாம் என்க.
இந்நூல் இறைஞான உதிப்பேயாம். எண்ணத்திற் கிளர்ந்தவை ஏகபேட்டியாகிஉதித்ததே இ·தெனின் மிகையாகாது. கருத்தா வினா வகுக்கச் சிருட்டி விடைவிடுத்ததே இஃதாம்.
குரோதம் விடுத்துக் குறை தடுத்து நிறையுளமெய்திக் கற்றிடின் இறைத்
திருவருளிசையுமென்பதில் ஐயமின்று.
இவ்வழியில் செல்ல விரும்புவோருக்கே இ·து அமைக்கப்பட்டுள்ளது. ஞானசூனியங்களுக்கன்று.
வாழ்க மெய்ப்பொருள்!
வாழ்க மெய்ஞானம்!!
வாழ்க ஞானிகள்!!!
- அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல் ஹசனிய்யுல் ஹாஷிமிய்
விளக்கம்:
இங்கு கருத்தா என்பது சிருட்டி கருத்தா (கருத்தாகிய நினைவு). சிருட்டி என்பது சிருட்டிக்கப்பட்ட ஆன்மா தங்கியுள்ள உடல் (நினைவால் சிருட்டிக்கப்பட்ட எண்ணங்கள்).
இறை கேட்டது: முதன் முதலில் நீர் எங்கிருந்தீர்?
யான் விடுத்தது : இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து, நான், நீ யென்றன்றி இல்லாதிருந்த நிலையிலிருந்தபோது, நான் உன்னுடன் கலந்திருந்தேன்.
இறை கேட்டது: அப்போது நீர் உம்மைக் கண்டீரா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். என்னை யான் கண்டேன்.
இறை கேட்டது: எப்படிக் கண்டீர்?
யான் விடுத்தது : இறைவா, உன்னில் என்னைக் கண்டேன். அப்போது என்னில் உன்னைக் கண்டேன்.
இறை கேட்டது: அப்போது நீர் எப்படியிருந்தீர்?
யான் விடுத்தது : இறைவா, உன்னில் யான் கலந்திருந்தேன்.
இறை கேட்டது: என்னில் நீர் எப்படிக் கலந்தீர்?
யான் விடுத்தது : இறைவா, இடைவெளியின்றிக் கலந்தேன்.
இறை கேட்டது: இடைவெளியற்றிருந்தது எப்படி?
யான் விடுத்தது : இறைவா, பனிக்கட்டி கரைந்து நீரில் கலப்பதுபோல்.
இறை கேட்டது: அப்போது உமது நிலை யெப்படியிருந்தது?
யான் விடுத்தது : இறைவா, அப்போது நானோ ஏகாந்த நிலையிலிருந்தேன்.
இறை கேட்டது: ஏகாந்த நிலையென்பது என்ன?
யான் விடுத்தது : இறைவா, நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது நானே என்னில் என்னைக் கண்ட நிலை. மற்றும் உன்னில் நான் அழிந்து உன்னில் நானாய்ப் பிறிதொன்றிலாதாகி உன்னிலே என்னை நீயாக இரண்டறக் கண்ட நிலை.
இறை கேட்டது: அப்போது நீர் எப்படியிருந்தீர்?
யான் விடுத்தது : இறைவா, யான் சலனமற்ற நிலையில் பரிபூரண ஆதி நிலையான சூனிய நிலையிலிருந்தேன்.
இறை கேட்டது: அப்போது உமக்குப் பார்வையிருந்ததா?
யான் விடுத்தது : இறைவா, ஆம் என்றேன்.
இறை கேட்டது: அது எப்படி?
யான் விடுத்தது : இறைவா, பரிபூரணத்தில் பரிபூரணமாய் நின்று பரிபூரணத்தைப் பரிபூரணத்தால் பரிபூரணமாய்ப் பார்த்தேன்.
இறை கேட்டது: எப்படிக் கேட்டீர்?
யான் விடுத்தது : இறைவா, மேற் சொன்னவாறே கேட்டேன்.
இறை கேட்டது: எவ்வாறு சுவாசித்தீர்?
யான் விடுத்தது : இறைவா, மேற்சொன்னவாறேதான்.
இறை கேட்டது: நீர், எவ்வாறு ருசித்தீர்?
யான் விடுத்தது : இறைவா, அவ்வாறேதான்.
இறை கேட்டது: எவ்வாறு உணர்ந்தீர்?
யான் விடுத்தது : இறைவா, அதுவும் அவ்வாறே.
இறை கேட்டது: உமக்குக் கண்ணிருந்ததா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் கண்ணாக விருந்தது.
இறை கேட்டது: உமக்குச் செவியிருந்ததா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் செவியாயிருந்தது.
| Tweet |
|
Posted: April 3rd, 2008 under ஞானம், தாகி பிரபம்.
Comments: 7
Comments
Comment from நான் நாகரா(ந. நாகராஜன்)
Time: April 17, 2008, 3:51 pm
ஐயா
அருமையிலும் அருமை இவ்வரும் பொக்கிஷப் பகிர்வுக்கு. அருளாளர் “அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல் ஹசனிய்யுல் ஹாஷிமிய்” அவர்கள் வழியாகப் பாயும் இந்த அருளமுதம் ஒருமையின் பெருமையை இருதயத்துக்கு உணர்த்துகிறது.
ஐயன் வள்ளல் பிரான் எனக்கு அறிவுறுத்திய “பூரண மந்திரம்”
“என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம் ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது.”
இக்குரு மந்திர விளக்கமாய் இருக்கிறது தாகி பிரபம்-1. மீண்டும் நன்றி பல. அருளாளர்களின் பொக்கிஷங்களைப் பகிரும் உம் நற்பணி மேன்மேலும் சிறக்க உம்மை நெஞ்சார வாழ்த்துகிறேன்.
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
நான் வழங்கும் மகாயோகம்
என் கவிதைகள்
Comment from நான் நாகரா(ந. நாகராஜன்)
Time: April 17, 2008, 4:02 pm
ஐயா,
“இறை கேட்டது: ஏகாந்த நிலையென்பது என்ன?
யான் விடுத்தது : இறைவா, நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது நானே என்னில் என்னைக் கண்ட நிலை. மற்றும் உன்னில் நான் அழிந்து உன்னில் நானாய்ப் பிறிதொன்றிலாதாகி உன்னிலே என்னை நீயாக இரண்டறக் கண்ட நிலை.”
அருளாளர் “அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல் ஹசனிய்யுல் ஹாஷிமிய்” அவர்களின் இவ்வரிகள் எனக்கு வள்ளல் பிரானின் வாக்குறுதிகளில்
“நானே நீ. நீயே நான்” என்ற இரண்டறக் கலந்த நம் ஒருமையை உறுதிப்படுத்தும் இவ் வாக்குறுதிகளை இருதய பூர்வமாக முழுமனதுடன் தியானித்து மகாயோகத்தில் நீ அமர்வாயாக! அத்வைத ஞானம் பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வில் நீ நிலை பெறுவாயாக!
இவ்வரிகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது. மீண்டும் நன்றி பல உமக்கே!
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
http://magaayogam.wordpress.com/ – நான் வழங்கும் மகாயோகம்
http://enkavithaikal.blogspot.com/ – என் கவிதைகள்
Comment from இஸ்மத்
Time: January 24, 2010, 4:16 pm
ஐயா
எமது குருபிரான் அவர்களின் தாகிபிரபம் படித்து அதை சுவைத்து நல்லதொரு கருத்தினை அழகுபட கூறிஉள்ளீர்கள் மகிழ்ச்சி….அவர்களை கண்டிரவில்லை என்றாலும் மானசீகமான குருவாக தாங்கள் ஏற்றுக் கொண்டதிலிருந்தே தங்களின் ஞானவேட்கையை புரிந்துக் கொள்ள முடிகிறது….தங்களின் வலைதளத்தை அவ்வபோது பார்த்து சென்றுள்ளேன்.
சகோதரர் ஆலிம் புலவர் உசேன் முஹம்மது தங்களைப் பற்றி என்னிடம் கூறிஉள்ளார்கள்…
தாங்கள் தாகிபிரபத்தை வலையில் பலரின் பார்வைக்கு வைத்தமைக்கு மிக்க நன்றி…
Comment from ஞானவெட்டியான்
Time: January 24, 2010, 6:03 pm
மிக்க நன்றி
Comment from Syed Ali Moulana
Time: January 29, 2010, 8:59 pm
Dear Sir,
My hearty thanks & wishes to you for this fabulous services….
God Bless you….
Comment from Jahabar Sathik Hakeem
Time: September 11, 2011, 11:36 am
Thanks for publishing of this truth. Best wishes for your services
Comment from ஞானவெட்டியான்
Time: September 12, 2011, 8:53 am
Thanx






Write a comment