விருந்தோம்பல்
விவேக சிந்தாமணி – 2.55
************************************
விருந்தின னாக வொருவன்வந் தெதிரின்
வியத்தனன் மொழியினி துரைத்தல்
திருந்துற நோக்கல் வருகென வுரைத்த
லெழுதல்முன் மகிழ்வன செப்பல்
பொருந்துமற் றவன்ற னருகுற விருத்தல்
போமெனிற் பின்செல்வ தாதல்
பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பா
னொழுக்கமும் வழிபடும் பண்பே.
ஒருவர் விருந்தினனாக மற்றொருவர் இல்லத்திற்கு வந்து எதிரே நின்றால், அந்த வீட்டுக்குடையவன் விருந்தினர் வரவைப்பற்றி வியப்படைதல், நல்ல சொற்களைக் கூறுதல், இனிமையாக எடுத்துக் கூறுதல், விருப்பத்துடன் பார்த்தல், வருக வருக என வரவேற்றல், விருந்தினரைக் கண்டவுடன் எழுந்து மரியாதை செய்தல், அவன் எதிரே நின்று மகிழ்ச்சியான செய்திகளைக் கூறல், வந்த விருந்தினருடன் அன்புடன் அருகே அமர்ந்து பேசல், விருந்துண்ட பின் அவர் போய்வருகிறேன் என்றவுடன் அவருடன் சிறிது தொலைவு(வாயில் வரையாகிலும்) சென்று அநுப்பிவிட்டு வருதல் ஆகிய ஒன்பது வகைச் செயல்களையும் உடையனாய் இருத்தல் வேண்டும். இதுவே விருந்தோம்பலின் இலக்கணம் ஆகும்.
Posted: July 11th, 2010 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: none


Write a comment