ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

கந்தர் கலிவெண்பா – 26

26. முகத்தி லணைத்துச்சி மோந்து முலைப்பால்
அகத்துண் மகிழ்பூத் தளித்துச் – சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்திலளித்(து)
உள்ள முவப்ப உயர்ந்தோனே – கிள்ளைமொழி
மங்கைசிலம்பின் மணியொன் பதிற்றோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து – தங்கள்
விருப்பா லளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார் வீரவாகு – நெருப்பிலுதித்து

சகத்தளந்த – உலகம் அளந்த திருமால்

கிள்ளை – கிளி

மங்கை – உமாதேவி

மணியொன்பது – சிலம்பிலுள்ள நவரத்தினங்கள்

துங்கம் – சிறந்த

மடவார் – ஒன்பது துணைச் சத்திகள்(ஒன்பது மணியின் பெயர் பெற்றவர்கள்)

நவவீரர் – ஒன்பது வீரர்கள்(வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரர்,
வீரமகேசுரர், வீரபுரந்தரர், வீரராட்சசர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர்

மரு – மணம்

…….தலையை உச்சிமோந்து முத்தம் கொடுத்து, தனது திருமுலைப்பாலை உள்ளத்தில் உண்டான தாய்ப்பாசத்தோடு கொடுத்து, உலகைத் தன் திருவடியால் அளந்த திருமாலாகிய வெள்ளைக் காளைமீது ஏறிவரும் குற்றமற்ற சிவபிரானின் திருக்கையில் குழந்தையைக் கொடுத்தபோது, அப்பெருமான் மனமகிழ்வதற்குக் காரணமாக இருந்த அண்ணலே!

கிளியின் சொல்போல சொல்லையுடைய உமையம்மையின் திருக்காலில் இட்ட சிலம்பிலுள்ள ஒன்பது இரத்தினங்களிலிருந்து தோன்றிய சிறந்த பெண்கள்பால் அவர்களின் துன்பம் நீங்கி மகிழ உதித்த வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேசுரர், வீரபுரந்தரர், வீரராட்சசர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் ஆகிய ஒன்பது வீரர்களுள் முதலாயுள்ள வீரவாகுத் தேவர் (நாரதர் வளர்த்த வேள்வித்) தீயில் தோன்றி, ………..

Write a comment