பிரபுலிங்க லீலை – 2.45
வாணாசுரனும் பானுகம்பனும் பேரொளி யுண்டாக்குதல்
*************************************************
2.45 பெய்யு மாமழை முகிலெனப் பெரியவாய் முழவம்
துய்ய மாமதி அனையவெண் சுரிமுகச் சங்கம்
ஐய வாணனும் பானுகம் பப்பெய ரவனும்
கையும் வாயுமொத் ததிர்த்தனர் செவிகரங் கவிழ்ப்ப.
முழவம் – குடமுழா என்னும் வாத்தியம்.
துய்ய- களங்கமற்ற.
சுரிமுகச் சங்கம் – சுழிந்த முகங்களையுடைய சங்கம்.
ஐயவாணன் – அழகிய வாணாசுரன்.
அதிர்த்தனர் – முழக்கினர்.
செவிகரம் கவிழ்ப்ப – காதுகளைக் கையினாலே மூடிக் கொள்ள.
பெரிய மழை பொழியவைக்கும் மேகங்கள் போன்ற வாயுடையது முழவம். வெண்ணிற முழுமதியென வெண்மை நிறத்தையுடைய சுழிபோல் வளைந்த முகங்களையுடைய சங்கம். வாணாசுரனுக்கு ஆயிரங்கைகள், பானுகம்பனுக்கு ஆயிரம் வாய்கள். எனவே இருவரும் முறையே முழவங்களை யடித்தும் சங்குகளை யூதியும் பேரொலியுண்டாக்கினர். இது நிரனிறையணி.
Posted: February 10th, 2010 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none


Write a comment