கந்தர் கலிவெண்பா – 23
23.நீக்கமின்றியாடி நிழலசைப்பான் போற்புவனம்
ஆக்கி யசைத்தருளு மாணையும் – தேக்கமழ்ந்து
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசுந் தசாங்கமெனப் பெற்றோனே – தேசுதிகழ்
பூங்கயிலை வெற்பிற் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையு முக்கட் பரஞ்சோதி – யாங்கொருநாள்
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் – தந்து
நீக்கமின்றி = சார்ந்து நின்ற
ஆடி = கண்ணாடி
நிழலசைப்பான்போல் = நிழலைக் காட்டுவது போல
ஆணை = அதிகார சக்தி, கட்டளை
தேக்கமழ்ந்து = தேன் பரிமளித்து
பனுவல் = பாட்டு, நூல்
விபுதர் = தேவர்
தேசு = ஒளி
தசாங்கம் = பத்து உறுப்பு(அரசர்க்கு உரியன = மலை, ஆறு, நாடு, நகர், குதிரை, யானை, தார், கொடி, முரசு, ஆணை)
கோதை = மாலையுடைய உமை
இடப்பாங்கு = இடது புறம்
தகுவர் = அசுரர்
முறை = முறையீடு
அதோமுகம் = உள்முகம்
எப்போதும் தான் அசையாமல், கண்ணாடியில் ஒரு பொருளின் நிழலை அசைத்துக் காட்டுவது போல, உலகை உண்டாக்கி அதை நடத்தும் திருவருளாகிய ஆட்சியும், பத்து அரச அங்கமாக உடையோய் எனத் தெய்வத் தன்மை பொருந்திய பாடல்களில் தேவர்கள் ஒவ்வோர் உறுப்பையுந் தனித்தனியே புகழ்ந்து பேசப்பெற்ற பெரியோனே!
ஒளி விளங்குகின்ற அழகிய கயிலைமீது, அழகிய மலர்மாலை போன்ற(உடைய) உமையம்மையை இடது புறத்திலே உடைய மூன்று திருக்கண்களையுடைய மேலாகிய பேரொளிப் பெருமான் வீற்றிருக்கும்போது, கொடிய அசுரர்கள் இழைக்கும் துன்பத்தைத் தாங்காது தம்மிடம் வந்து ஓலமிட்ட தேவர்களின் வேண்டுகோளுக்கிரங்கித் தம் ஐந்து திருமுகங்களோடு கீழே நோக்கிய உள் முகமுஞ் சேர்ந்து ஆறு திருமுகங்கள் உடையவராகி……………….
Posted: February 10th, 2010 under கந்தர் கலிவெண்பா, கெளமாரம், பக்தி.
Comments: none


Write a comment